Thursday, March 09, 2006

18: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 11

மீனாக்ஷி அம்மனை வலம் வந்து, சன்னிதிக்குள் இருக்கும் இரட்டை விநாயகரையும், வள்ளிதேவானையுடன் அருளும் சுப்ரமணியரையும் வணங்கி, சண்டிகேஸ்வரியிடம் நம் வருகையை அமைதியாக தெரிவித்து, தென்புறவாயில் வழியாகவோ, கிழக்கு வாயில் வழியாகவோ கொடிமரத்தை சுற்றி வந்து, உட்பிராகாரத்தின் உள்ளே சென்றால், திருமலை நாயக மன்னனின் வண்ண உருவச்சிலை, தமது பட்டத்து ராணியுடனும், தன் அபிமான மகளுடனும் கரங்கள் கூப்பிய நிலையில் நிற்க்கின்றனர். ஒவ்வொரு இரவும் பள்ளியறை பூஜைக்கு 5 நிமிடத்திற்க்கு முன்பு நடக்கும் தீபாரத்தி இங்கு நடக்கும்பொழுது மன்னன் தன் குடும்பத்துடன் சர்வேஸ்வரனை வணங்குவதாக நம்பப்படுகிறது.

அற்புத ஆலயத்தை மக்களுக்கு அற்பணித்த மன்னனுக்கு நன்றிகூறி, அம்மன் சன்னிதி பிராகாரத்தில் உள்நோக்கி சென்றால் கொலுமண்டபத்தை பார்க்கலாம், நவராத்திரி வேளையில் இப்பகுதியில் பலவிதமான பொம்மைகளையும், பல கோலங்களை தரித்து அம்மன்னும் கொலுவிருப்பதை காண ஓராயுள் போதாது.

(பிட்டுக்கு மண் சுமந்த சொக்கநாதர் கோலத்தில்)

பின்னால் சிவலிங்கமும், குமரகுருபரரின் திருஉருவச்சிலையும், குன்றகுடி குமரனையும் தரிசிக்கலாம்.

அங்கிருந்து சன்னிதி வாசல் நோக்கி வந்து, மீண்டும் கொடிமரத்தை அடைந்து கைகூப்பிவணங்கி வெளியே வந்து வடக்கு(இடதுபுரமாக) நோக்கி சென்றால் கூண் பாண்டியனின் வெப்பு நோய் நீக்கிய மடப்பள்ளி திருநீரை தரித்து, முக்குருணி விநாயகரை நோக்கி சென்றால், சுவாமி சன்னிதியின் வெளிபிராகாரத்தை அடையலாம்.

அடுத்த பதிவில் முக்குருணி விநாயகர், வெளிபிரகாரத்தின் வீற்றிருக்கும் என்னற்ற சிவலிங்கங்களும், ஆதிபராசக்தியும், தமிழ் புலவர்கள் சன்னிதியும், திருகல்யாண மூர்த்தி சன்னிதியும்.

Wednesday, March 08, 2006

17: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 10

அம்மன் சன்னிதிக்குள் நுழையும் பொழுது எல்லா இந்திரியங்ளாலும் அம்மனை நினைத்து, தியானித்து உள்ளே சென்று துவஜஸ்தம்பதின் முன்னால் வடக்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ ஸாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, திருமலை விநாயகரிடமும், நந்திகேஸ்வர்ரிடமும் அனுமதி பெற்று

"நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாயகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆயகியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே."

என்று மனதார பாராயணம் செய்து, சரணடைந்து, கண்ணாடி சேவை கண்டு பேரின்பத்துடன் உள்ளே சென்றால், அழுகுரலுக்கு ஓடிவந்து ஞானசம்பதர்க்கு ஞானப்பால் அளித்தவள், ஞானமள்ளி தர ச்ரீ சக்கரத்தை குண்டலமாக தரித்து நிற்பவள், தமக்கே உரிய சர்வ அலங்காரத்துடன்,

"கலையாத கல்வியும் குறையாத வயதும்ஓர் கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாத சந்தா னமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உத விப்பெரிய தொன்டரொடு கூட்டு கண்டாய்;
அலையாழி அறிதுயுலு மாயனது தங்கையே! ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமி!"

என்ற அபிராமி பட்டரின் வாக்குபடி 16 செல்வங்களை அள்ளிதர காத்திருக்கிறாள் அன்னை மீனாட்சி, இவளே காஞ்சியில் காமாட்சி, காசியில் விசாலாட்சி, தென்கோடியில் கன்னியா குமரி, வடகோடியில் வைஷ்ணவி, மேற்க்கில் மாஹாலட்சுமி, கிழக்கில் காளி, சமயபுரத்தில் மாரி, எல்லயில் பத்ரகாளி, அடங்காதவர்க்கு நீலி இப்படி இவளின் கோலங்கள் பலவகும். ஆனால் அம்மா ஒன்றாகும்.


"அரிது அரிது மானிடராதல் அரிது அதினினும் அரிது

கூண் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது,

கூண் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது,

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்,

வானவழிபாடு வழிபிறந்திடுமே."

என்ற ஞானத்தின் முக்கியத்துவத்தை உரைக்க ஔவை கையாண்ட மொழிகளை பார்க்க முடியும். கடைசி வரியில் வரும் "வான வழிபாடு" என்பதில் அவள் பாதகமலத்தில் அனைத்தும் அடக்கம்.

(சமீபத்தில் அம்மனுக்கு அனுவிக்கப்பட்ட பொற்பாதங்கள்.)

Monday, March 06, 2006

15: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 9

* கிளிகூண்டு மண்டபம்,
ஒருமுறை சுகமுனிவர் கிளிருபங்கொண்டு அம்மனை காணவந்தவர் அம்மனின் மரகதவண்ணம் கண்டு, நானும் பச்சை, தாங்களும் பச்சை வண்ணமே என்று சொல்லி அப்படியே அம்மனின் கைகளில் அமர்ந்து விட்டதாக சொல்வதுண்டு. அதை நினைவு கூறும் வகையில் பல கிளிகளை வளர்த்து வருகின்றனர். இடையில் தடைபட்ட இப்பணி, இப்போது மீண்டும் உயிர்பித்துள்ளது.


* ஊஞ்சல் மண்டபம்,

ஒவ்வொரு வெள்ளிகிழமை மாலையில் அம்மனும், அப்பனும், இங்கு எழுந்தருளி ஊஞ்சல் சேவை வழங்குவர். அடியார் ஒருவர் பண் இசைத்து கொண்டே ஊஞ்சலை கயிறு கொண்டு தாலாட்டுவது போல் ஆட்டுவிப்பதை காண கண்கோடி வேண்டும்.

ஊஞ்சல் மண்டபத்தை அடுத்து அமைந்துள்ள கோவிலின் மாதிரி.

* சித்தி விநாயகர் சன்னிதி.

கோவிலின் ஸ்தல விநாயகரான சித்தி விநாயகர், சகல சித்திகளை அருளவும், பெற்ற சித்திகளை காத்து, வளர்துவர பல வித்தைகளையும் அருளிவருகிறார். காலையில் இவருக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது பிறகே மற்ற சன்னிதிகள் (அம்மன் சன்னிதி உட்பட) திறக்கப்படுகிறது.

* பஞ்சபாண்டவர் மண்டபம்.

13 ஆண்டுகள் வனவாசத்தின் போது காடுகளில் சுற்றி திரிந்த பஞ்சபாண்டவர்கள் கடம்ப மரங்கள் நிறைந்த க்ஷேத்திரத்தில், அர்ச்சுனனின் தர்மபிதாவான இந்திர விமானதினடியில் இருந்த சொக்கநாதரை கண்டு வியந்து இவ்விடத்தில் அமர்ந்து கடும் தவமியற்றி அர்ச்சுனன் ஈசனிடமிருந்து காண்டீபம் என்ற வில்லை பெற்றதாகவும், மற்றவர்கள் தீர்காயுள் பெற்றதாகவும் சொல்வதுண்டு. அதை நினைவு கூறும் வகையில் சித்தி விநாயகர் சன்னிதியை அடுத்து பஞ்சபாண்டவர் சிலைகளை நிறுவியுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் தர்மன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் நால்வரும் தமக்கே உரிய அஸ்திரங்களுடனும், பீமன் கதையை உயர்த்தியபடி பலி பீடத்தின் இடது புறத்தில் நிற்க, திரௌபதி இம்மண்டபத்தின் வடகோடியில் நானிய முகத்துடன் நிற்கிறாள்.

மேலும் ஒவ்வொரு சகோதரர்களின் இடையிலும் விதவிதமான யாளி சிலைகளும், பீமனின் மறுபுறத்தில். வியக்ரபாதரும், வாலி, சுக்ரீவன், சிலைகளுடன், ஆங்கிலேய ஆட்சியின் போது மதுரை மக்களால் 'பீட்டர் பாண்டியன்' என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேயர் ஒருவரின் சிலையும் உள்ளது. ஒருமுறை இவர் அம்மனால் இடியில் இருந்து காக்கப்பட்டவர், பிறகு அம்மையின் பேரன்புக்கு பாத்திரமாகி, மதுரை எல்லையில் உள்ள எல்லா கோவில்களை பேணிகாக்க நிதிகளை வழங்க உத்தரவிட்டவர். அதனாலேயே இவரை மக்கள் பீட்டர் பாண்டியன் என்று அழைத்தனர் .


அடுத்து பலிபீடத்தில் நம் அகந்தைகளை பலியாக்கி, சித்த சுத்தி பெற்று அம்மனை நோக்கி செல்வோம்.

முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

Saturday, March 04, 2006

13: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 8

பொற்றாமரை குளத்தின் சுற்றில் கோவிலின் எல்லா கோபுரங்களிலும் உள்ள எல்லா கலை அம்சத்தையும், வேலைப்பாடுகளையும் தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சில
என்றும் மீனாக்ஷியம்மையின் பக்தர்களுக்கு வழிகாட்டும் மன்னன் குலசேகர பாண்டியன், குளத்தின் வடபகுதியில்.


'புறத்தூய்மை நீரான் அமையும்' என்ற ஐயனின் வாக்குபடி, இக்குளத்தில் இறங்கி புறசுத்திபெற்று, வினைதீர்தானிடம் விபூதி பெற்று, அம்மன் சன்னிதியை நோக்கி செல்வோம்.


அடுத்தது கிளிகூண்டு மண்டபமும், ஊஞ்சல் மண்டபமும், பஞ்சபாண்டவர் மண்டபமும்.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

Wednesday, March 01, 2006

12: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 7


பொற்றாமரை குளம், தமிழ் மறைகள் நீரில் மூழ்காமல் பொன்மயமான தாமரையால் தாங்கிய இடம்.

'நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நக்கீரர் சிவபெருமனின் நெற்றிகண்ணால் ஆட்கொள்ளப்பட்டு விமோசனம் பெற்று எழுந்த இடம் இப்பொற்றாமறை குளம்.








குளமென்றால் நீரிருக்கும், மீனிருக்கும், கார்நீலமிருக்கும், கொகிருக்கும். இவையெல்லாமுடன், தங்க விமானத்தின் பிரதிபிம்பம் போல் குளத்தில் ஒரு தாமரை இருந்தால்? ஆம் தற்போது பொன்மயமான ஒரு தாமரையை குளத்தில் வைத்துள்ளனர்.

மேலும் பூஜைக்கு தேவையான தாமரை புஷ்பங்களை பொற்றாமரை குளத்திலிருந்தே எடுக்கிறார்கள்.

இத்தாடகத்தை சுற்றி உள்ள சுவற்றில் மூலிகையால் கோவில் வரலாற்றை வரைந்து வருகின்றனர். இதில் இதோ தாமரையில் வண்ண மூலிகை ஓவியம்.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 6

மீனாக்ஷி நாயக்கர் மண்டபத்திலிருந்து குறுகிய படிவழியே அம்மன் சந்நிதி நோக்கி நடந்தால் முதலில் வருவது மீனாக்ஷி அம்மன் கோபுரம். அழகான வேலைபாடுகள் கொண்ட தூண்களை கீழேயும், சிற்பங்களை கோபுரத்திலும் காணலாம்.

அடுத்தபடியான மண்டபம், முதலி மண்டபம். இந்தக் கூடத்தில் அரிய வகை சிற்பங்கள் இருக்கின்றன. சிவன் பிக்ஷாந்தராக உள்ள சிற்பம், மோகினியின் சிற்பங்கள், தாருகா வனத்து முனிவர் ஒருவரது சிலையும் உள்ளது. வலது பக்கம் பால நர்த்தன கணபதியும், பால முருகனும் காட்சி தருகின்றனர்.


அடுத்து வருவது மறை நூல்கள், மூழ்காமல் பொற்றாமரையால் தாங்கிய இடம், பொற்றாமரை குளம்.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

Monday, February 27, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 5

தற்போது நாம் நிற்பது மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். இங்கிருந்து தென் பகுதிக்கு சென்றால், வன்னி மரத்தடி விநாயகரும், சாட்சி லிங்கமும், வன்னிமரமும், வன்னி, நெல்லி, அரசு, வேம்பு, மந்தாரை, அத்தி, நாகலிங்க என பல விதமான மரத்தடியில் வீற்றிருக்கும் கணேச மூர்த்திகளை தரிசிக்கலாம். எதிரில் யானையும், ஒட்டகம் கட்டுமிடமும், ஆடி வீதியில் கோ மடமும் இந்த தென் பகுதியில் தான் உள்ளது.

தெற்கு பகுதியை சில பதிவுக்கு பிறகு சொல்கிறேன்,

வடபகுதியில் சுவாமி சன்னிதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது திருக்கல்யாணமண்டபம். சில ஆண்டுகளுக்கு முன் வரை இங்கு தான் திருக்கல்யாணம் நடைபெற்றுவந்தது, அதை பார்க்க வி.ஐ.பி. க்கள் பாஸ் மூலம் மட்டுமே அனுமதிக்கபட்டனர், தற்போது இந்நிலை மாறி அனைவரும் காணும் வண்ணம், ஆடிவீதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கே திருமணம் நடந்து வருகிறது. தற்போது திருமணம் முடிந்த பிறகு அனைவரும் இங்கே எழுந்தருளி பக்தர்களை பேரின்பக்கடலில் ஆழ்த்துகின்றனர். இதில் விஷேசம் யாதெனில் திருப்பரங்குன்றத்து முருகனும், பவளக்கனிவாய் பெருமாளும் திருமணத்திற்க்கு வருகை தருவதும், பெருமாள் அண்ணன் ஸ்தானத்திலிருந்து தாரைவார்த்து தர, திருமாங்கல்ய தாரனத்துடன் திருமணம் நடை பெருகிறது.


இம்மண்டபதின் மேடையின் வலது ஓரத்தில் உள்ள குண்டோதரனுக்கு திருகல்யாண நாளன்று முதல் படையல் செய்யபட்டு பின்னரே மற்ற தெய்வங்களுக்கு நெய்வேத்தியம் படைக்க படுகிறது.

திரும்பும் வழியில் 'எத்துன்பம் வந்தாலும் களைய இதோ நானிருக்கிறேன்' என்று சொல்லியபடி வியக்கிர பதத்துடனும், மனித உடலுடனும், சிங்கமுகத்துடனும் நிற்க்கும் சரபேஸ்வரை கண்ட மாத்திரத்தில் நம் துன்பங்கள் விலகும் விந்தையை அனுபவிக்கலாம். 'சங்கர சங்கர' நாமம் சொல்லி அவரை வலம் வந்து மீனாட்சி சந்நதி நோக்கி வரும் சமயத்தில், மீனாக்ஷி நாயக்கர் மண்டபதில் உத்திரதில் இருக்கும் ராசி மண்டலம் காண்போரின் கருத்தை கொள்ளை கொள்ள செய்யும்.

அடுத்து பதிவில் வருவது முதலிமண்டபம்.

முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

Saturday, February 25, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 4

மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்.




வெளிநாட்டவரும் யானையிடம் ஆசி பெருவதை இங்கு காணலாம்.


ஏராளமான பூக்கடை, ஸ்வாமி திருஉருவசிலைகளும், படங்களும் விற்க்கும் அங்காடிகள், குங்குமம், விபூதி,மஞ்சள் விற்க்கும் கடைகளையும் காணலாம்.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 2

அம்மன் சன்னதியின் வாயிலில் காக்ஷியளிக்கும் கணேசனும், கார்திகேயனும்



சிவமுருகன்

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 1

மீனாக்ஷி அம்மன் கோவிலில் படங்கள், என் படகோப்பிலிருந்து சில.
முதலில் தும்பிக்கையானை துதித்து.




சிவமுருகன்

அடுத்த பதிவு

Monday, February 20, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 3

இப்போது வர இருப்பது அஷ்ட சக்தி மண்டபம்.

மீனாக்ஷி அம்மன் சன்னதியில் நுழைவுவாயிலில் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி, இயங்க்னருபினி, ஷ்யமளா, மஹேஸ்வரி, மனொமோஹினி என்ற 8 பெண் தெய்வங்கள் நின்ற நிலையில் அருள் பாலித்துவருகின்றனர். இவை திருமலை மன்னனின் மனைவி ருத்ரபதி அம்மாவால் நிர்மானிக்கப்பட்டது. இம் மண்டபத்தில் தேங்காய், பழம், கற்பூரம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் நிறைய இருக்கின்றன.

இம்மண்டபதின் வாயிலில் மையமாக நின்று அம்மன் சந்நதியை நோக்கினால், உள்ளே நடக்கும் கற்பூர ஜோதியை தரிசிக்கலாம்.

பின்னால் நகரா மண்டபம், வலது பக்கம் மகாத்மா காந்தி பூங்கா, இடதுபுரம் பக்தர்க்ளின் காலனிகளின் பாதுகாக்குமிடம்.

மண்டபத்தில் இடது மூலையில் விநாயகரும், வலது மூலையில் ஆறுமுக கடவுளான முருகனும், ஓரேகல்லில் வடிக்கப் பட்டுள்ளனர். 14மீ நீளமும், 5.5மீ அகலமும் கொண்ட இம் மண்டபம் 1960-63 -ல் கட்டப்பட்டது.







முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

Tuesday, October 04, 2005

தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...



வலையில் சுற்றி வரும் வலை தமிழர்களே

இதோ வந்துவிட்டேன் சிவமுருகன் உங்களுடன் உரையட, உறவாட

பிளாகில் புதுதிதாக் ஏதாவது செய்ய யத்தனித்து கிள்ம்புகிறேன். என் பாதையில் கிடக்கும் மலர்களை சேதபடுத்தாமல், மேலும் கிடக்கும் முட்களில் சாதுர்யமாய் கடக்கும் வல்லமையை எனக்கு அறிவுறுத்திய என் அண்ண(ல்ல)னுக்கு இப்பிளாக்கை சமர்பிக்கிறேன்.

புத்திதாய் எழுதுகிறேன், பிழைகளை என்னிடம் கூறுங்கள்,
திருந்த ஓர் வாய்ப்பளிப்பீர்.

நன்றி