Saturday, August 30, 2008

நாரைக்கு முக்தி அளித்த படலம்


உலகில் கண் இருக்கும் எவ்வுயிர்க்கும் நற்கதி தரும் தெய்வமாம் ஈசனை தியானித்தால், எக்கதி விருப்பமோ, அக்கதி அவன் அருள் தருவான்!
உலகின் பழிக்கு அஞ்சி, அப்பழி இனி உலகில் ஏற்படாவண்ணம் வாழச்செய்யும் ஜீவன் உலகில் மிகவும் அரிதிலும் அரிது. அப்பேற்பட்ட ஒரு ஜீவன் தான் தாமரை வண்ண கால்களும், நிலா நிறம் கொண்ட சிறகுகளை பெற்ற ஒரு நாரை.

மதுரையம்பதியிலே ஒரு வனம், அந்த வனத்தில் குளிர் தருவும், தரு தரும் நிழலும், நிழலருகில் இருக்கும் சென்பக மலர் வீசும் அச்சோ என வழங்கப்பெறும் குளிரோடையும், காணும் இனத்தையெல்லாம் ஈர்த்தது. ரிஷி முனிகள் அக்குளக்கரையில் குடிலமைத்து தவம் செய்தனர், புழு பூச்சிகள் அருகில் இருந்த மரங்களை நாடியும், மரங்கள் குளத்திலிருக்கும் நீர்நிலைகளை நாடியும், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவையினங்கள் என பல இனங்கள் தம்மோடு கூடி அவ்வனத்தில் வாழ்ந்து வந்தன.
முனிவர்கள் தவத்தாலும் கொல்லாமை – புலால் உண்ணாமை என்பது ஏனோ ஓர் இளநாரைக்கும் தொற்றியது. தவசீலர்கள் நீராடும் சமயம் அவர் உடல் தீண்டும் சுகம் பெற்ற கயலினங்கள் எத்தவம் செய்தனவோ அவை உண்டு தாம் எப்பிறவி எடுக்க வேண்டுமோ என நாரை அஞ்சத் தொடங்கிற்று.
தன் எண்ணத்தின் பால் வீறும், பற்றும், திடமும் கொண்ட நாரையும் வாய்பெய்து கவ்வும் தன்மையை விடுத்து நீறும், புல்லும் உட்கொண்டு வாழ்ந்தது. இதுகாரும் தான் செய்த நோம்பினால் கரிகுருவிக்கு உபதேசித்த இறைவன் சொக்கநாதர் பெருமை அங்கிருந்த முனிவர் வாயிலாய் கேட்க கிட்டியது, இறைவன் செய்து வந்த லீலைகளை அவ்வேதியர் சொல்ல கேட்டது, நாரை.

தாமும் தம் குலமும் தழைத்தோங்க, அந்நாதனை பணிய முற்பட்டு, கடம்பவன க்ஷேத்திரத்தை அடைந்தது சிவந்த கால்களையும், பால் நிறம் கொண்ட அந்நாரை. அறியாமையை போக்கும் புண்ணிய பூமியாம், திருவாலவாயென்னும் இத்தலம் அகன்று நின்றமாடங்கள் நிறைந்த ஒப்பற்ற பதி. அஞ்ஞனம் வந்திருங்கிய நாரையானது வேழம் தாங்கிய விமனத்தை கண்டும், பொற்றாமரை கொண்ட குளத்தையும் கண்டு சிலிர்த்தது.

மூவைந்து தினங்கள் பொன் தாமரை தடாகத்தில் நிறாடி, சொக்கரையும், உமையாளையும் வலம் வந்து கொண்டிருந்த சமயம், தான் பிறவிப்பிணியினால் அக்குளத்து கயல்களின் பால் ஈர்த்து தன் பசியார நினைத்தது.

அச்சமயமே, ஈசன் கொண்ட திருவுள்ளத்தினால், தாம் எண்ணிய எண்ணத்தை வருந்தி ஈசனிடம் சிரம் தாழ்த்தி அவரடி தொழுதது. அவரடியில் இரு துணைமலரென்னும் தாமரையை வைத்து வணங்கியது. அதில் மகிழ்ந்த ஈசனாரும் அதன் முன் அது கேட்ட உருவில் தோண்றி “வேண்டும் வரம் இயம்புக” என்றார்.

இறைவனை தனெதிரில் கண்ட நாரையும், “ஈசனை தொழுது, சிவலோகத்தில் மேவி நான் உய்ய வேண்டும், மேலும், வள்ளலே இத்தாமரைக் குளம், மிகவும் புண்ணியக் குளம், இக்குளத்து கயல்களை யாதொரு எம்மரபினரும், பிற உயிரிகளும் உண்ண நேரிடின் சொல்லொன்னா பாவம் வந்து சேரும் ஆதலினால் இக்குளத்தில் நீர்வாழ்வாதார உயிரிகளற்று இருக்க கடவது,” என்று வேண்டினன்.

ஞாலத்து வெள்ளியை (நிலவை) தாங்கியவரும், ஆலவாய் வெள்ளியம்பல நாயகனுமான ஐயனும் “எஞ்ஞான்றும், இத்தடாகத்தில் மின்கள் இல்லையாகுமாறு” எனவும், அந்நாரைக்கு தன்கதி தரவும் அருளினான்.

ஐந்து துந்துபி வாத்தியங்கள் முழங்க, தேவ விமானத்தின் மீதேறி தாம் ஈசனிடத்தில் வேண்டிய சிவகதி அடைந்தது நாரை.

தனக்கு நற்கதி கேட்ட குருவிக்கு மந்திர உபதேசம் செய்து முக்திக்கு வழிகாட்டிய நாதன், தன் இனத்திற்க்கும், பிற இனத்திற்க்கும் நற்பெறும் படி செயலாற்றிய நாரைக்கு சிவலோக பதவியளித்தான்.

இன்றும் பொற்றாமைரை குளத்தில் மலர் இருக்கும், நீர்வாழ் தாவரங்கள் இருக்கும், ஆனால் மீனோ, புழுவோ! இருக்காது, ஆகவே மீனிற்க்கு பொறியிடும் வழக்கமும் இக்குளத்தில் இல்லை. இதுவும் ஆலவாயப்பனின் திருவிளையாடல்.

48வது திருவிளையாடலான நாரைக்கு முக்தியளித்த படலம் முடிந்தது.
சுபம்

4 comments:

அப்பாதுரை said...

ஒரு ஐயம்.

மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது எந்த முறையில் நியாயம்? அது வரை இருந்த மீன்களின் கதி என்ன ஆயிற்று? சிவனுக்கும் நாரைக்கும் தான் தெரியும்.

சிவமுருகன் said...

வாங்க அப்பாதுரை.

முதல் முறை பின்னூட்டியுள்ளீர்கள் நன்றி.

வந்த பின் காப்போன், வருமுன் காப்போன், வராதிருக்க செய்யோன் என்ற மூன்று சொற்றொடர்கள் உள்ளன, அவற்றில் மூன்றையும் இங்கே காணலாம்.

நாரை தன்னை ஆசை வந்த பின் காத்துக்கொண்டது, ஆசை வருமுன்னரே ஈசனிடம் வேண்டியது, இக்குளத்து மீன்கள் இருந்தால் தன் இனத்தவர் உண்டு சொல்லொன்னா பாவம் பெறுவர் என்று எண்ணிய நாரை உயிரிகள் வாரதிர்க்க வரம் வேண்டியது.

புண்ணிய குளத்து மீன்கள் எல்லாவற்றுக்கும் நற்கதி தான் சிவகதி தான்!

ஆகவே தான் இக்குளத்தில் பொறியிட்டு வணங்கும் முறை இல்லை!

குமரன் (Kumaran) said...

நாரைக்கு முக்தி கொடுத்த படலம் நன்றாக இருக்கிறது சிவமுருகன். அங்காங்கே பல சொற்றொடர்கள் புரியவில்லை.

இன்று தான் பொற்றாமரைக்குளத்தில் மீன்கள் இல்லாத காரணத்தை அறிந்தேன். நன்றி.

சிவமுருகன் said...

//அங்காங்கே பல சொற்றொடர்கள் புரியவில்லை.//

எச்சொற்றொடர்கள் புரியவில்லையென சொல்லுங்கள் விளக்கி விடுகிறேன்.