

பாண்டிநாட்டில் “திருவாலவாயென்னும்” க்ஷேத்திரமுண்டு அதை தான் யாம் சொல்கிறோம்! என்று தொடர்ந்த முக்கியஸ்த்தன் மேலும் கூறலானான் "பேரன்பர்களே! உலகில் இந்த மூர்த்தியோ பெரும் கீர்த்தி பெற்றது, தீர்த்தமோ தங்கமயமானது! தலமோ தேவாதி தேவர்களும், ரிஷிமுனிகளும், வந்து வணங்கப்பெற்றது!. ஈசனின் மொத்த கருணையும் இத்தலத்திற்க்கு பாத்தியமுண்டு! வருணன் தாக்கிய நகரை கருணாமூர்த்தி காத்த தலம் இத்தலம்!”(தலம்) “நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வதிட்ட கீரனின் தீப்புண் போக்கிய தீர்த்தம் இத்தீர்த்தம்” (தீர்ர்த்தம்) “பிரம்மஹத்தி தோஷம் தீர இந்திரன் வழிபட்ட மூர்த்தி இம்மூர்த்தி (மூர்த்தி)” ஆக மூர்த்தி தலம் தீர்த்தம் என்று எவ்வகை தொழவும், இறைசார் பிராத்தனையும் இங்கே இவ்விடத்து உண்டு, இத்தலம் வானவர் அனைவருக்கும் அளிக்கும் வரங்கள் பிறரும் அறியும் வண்ணம் அது உள்ளங்கை நெல்லியாம்! என முடிக்கவும் பொழுது பொல பொலவென விடியவும் சரியாக இருந்தது.
வழிப்போக்கர் அனைவரும் அங்கிருந்த தடாகத்தில் சந்தியா வந்தனம் செய்து, தத்தமது வழிபார்த்து செல்லலானர்!
இதுகாரும் ஆலமரதடியில் நடந்த உரையாடலைக் கேட்டபடி மரத்தில் இருந்த குருவி, தன் பிறவிபிணி தீரும் வழி பற்றி அறிந்து திருவாலவாயன் சன்னதி நோக்கி விரைந்தது.
தன் குறை தீர தினமும் பொற்றாமரை குளத்தில் நீறாடி, மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் வலம் வந்து கொண்டிருந்தது!
இப்படியாக மூன்று தினங்கள் நடந்தேறியது.
அக்குருவியின் பக்தியின் சிரத்தையை மெச்சிய அன்னை அங்கயர்கண்ணி தன் கணவனிடத்தில் கேட்டாள்! ஐயனே! இக்குருவி வந்ததன் நோக்கம் யாது? இதுவும் தங்களது திருவிளையாடல் தானோ எனக் கேட்டது? ஈசனும் தன் இமையாத மூன்று கண்களாலும் கருணைப் பார்வை பொழிந்து, பசிக்கு தவிக்கும் கண்றுக்கு பாலுட்டும் ஆவினை போல் ஆலவாயப்பனும் அக்குருவிக்கு சத்தியஞான மந்திரமாம், மரணத்தை வெல்லும் மந்திரமாம், மஹா மிருத்துஞ்சய மந்திரத்தை உபதேசித்தருளினார்.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்முக்ஷீ ய மாம்ருதாத்
(மஹா நாராயண உபநிஷதம் 56-1)
மந்திரத்தின் பொருள்:
முக்கண்ணனை நான் வணங்குகிறேன். நறுமணம் மிக்கவன் அவன். நம் ஆரோக்கியத்தை (புஷ்டியை) வளர்ப்பவன் அவன். மரணத்தின் பிடியிலிருந்து என்னை விடுவித்து மரணமிலா பெருவாழ்வை தர அவனை வேண்டுகிறேன்.
(மந்திரத்தின் பொருள் உபயம் குமரன் - ஞானம் ஐயா அவர்களுது பதிவிலிருந்து)
பயம் என்பது ஒரு மனிதனை தன்நிலையிலிருந்து கீழே இட்டுவரக்கூடியது அப்பேற்பட்ட பயத்திற்க்கெல்லாம் பெரிய பயம் மரணபயம். மரணத்திற்க்கு அதிபதியான காலனையே பயங்கொள்ள செய்தது இந்த மரணபயம். அத்தகைய பயத்தை போக்க இம்மந்திரம் சொக்கநாதர் அக்கரிகுருவிக்கு உபதேசித்தார்.
உபதேசம் பெற்ற குருவியோ மிகவும் அகமகிழ்ந்து! ஈசனை போற்றி பாட ஆரம்பித்ததது
எண் இலா உயிர்க்கு இறைவ போற்றி
வான் தண் நிலா மதிச் சடில போற்றி
என் புண்ணியப் பயன் போற்றி
அமால் கயல் கண்ணி நாத நின் கருணை போற்றி.
இவ்வாறாக போற்றிபாடி இறைவனிடம் தன் குறை சொல்லியது அக்குருவி!
“இறைவா! தெளிவில்லாத மனதால் செய்த தீவினையால் இக்கதி அடைந்த என்னை ஆட்கொள்ள வேண்டும்!’ ’தம்மை ஆட்கொள்வதோடு தன் இனத்திற்க்கு எவ்வித கேடும் இன்றி இவ்வுலகில் வலம் வர வரம் நல்க வேண்டும். தம் இனத்தவர் யாவரும், எங்கும் எச்சமயத்திலும் பறந்து செல்ல வேண்டும்!’ “அங்ஙனமே நீர் எமக்கு உபதேசித்த மூவோசை கொண்ட மந்திரத்தை உறைப்பவர் தம் மரண பயத்தை போக்கி தீர்க்காயுளும் அருளவேண்டும்” என்றது.
“அவ்வாறே ஆகுக” என்ற காருண்யமூர்த்தி அக்குருவி செய்த செய்கையாலும் தன் இனத்திற்க்கே வலியை போக்கிய தன்மையாலும், இவ்வுலக பயத்தையும் போக்கு வண்ணம் வரம் கேட்ட தன்மையாலும், இஞ்ஞாலம் அதனை “வலியான்” என போற்றும் என்று அருளி மறைந்தார்!
மூவெழுத்தினால் முடிந்த மந்திரம் என்று திருவிளையாடல் புராணம் மிருத்துஞ்சய மந்திரத்தை போற்றுகிறது அதாவது, இந்த மந்திரமானது தெய்வம், இருடி, சந்தம் என்று முடிவதால் இதனை மூவெழுத்தினால் ஆன மந்திரம் என்கிறது. இதை உதாத்தம், அநுதாத்தம், சொரிதம் என்று வடமொழி இயம்புகிறது.
இம் மது ரேசன் சேவித்து ஏத்து வோர்க்கு எளியன் ஆகிக்
கைம் மலர் நெல்லி போலக் கருதிய வரங்கள் எல்லாம்
இம்மையின் உடனே நல்கும் ஏனைய தலத்து வானோர்
அம் மையின் அன்றி நல்கார் ஆதலால் அதிகன் என்றான். 8
மற்று அது கேட்டுக் கொம்பர் வைகிய கயவாய் ஞானம்
பெற்றது பறவை ஆகிப் பிறந்ததும் பிறவும் தேற்றம்
உற்றது நாம் இச் சன்மம் ஒழிப்பதற்கு அறவோன் இங்ஙன்
சொற்றதே உறுதி என்று துணிவு கொண்டு எழுந்தது அன்றே. 9
ஆய் மலர்க் கான நீங்கி ஆடக மாடக் கூடல்
போய் மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து ஆம்பல்
வாய் மலர்க் கயல் உண் கண்ணாள் மணாளனை வலம் செய்து அன்பில்
தோய் மலர் கழல் இனானை அகத்தினால் தொழுது அர்ச்சித்தே. 10
இன்னணம் மூன்று வைகல் கழிந்தபின் எம்பிராட்டி
தன் அமர் காதலானைத் தாழ்ந்து எதிர் நோக்கி ஐய
என்னைக் இக் கயவாய் செய்யும் செயல் இதன் வரவு யாது என்ன
முன்னவன் அதன் தன் செய்தி வரவு எலாம் முறையால் கூறா. 11
பத்திமை நியமம் பூண்ட பறவை மேல் கருணை நாட்டம்
வைத்து இமையாத முக்கண் மறை முதல் ஒரு சேய்க் கன்று
நித்திய நிலைமை நல்கி நேர்ந்த வெம் கூற்றைக் காய்ந்த
சத்திய ஞான மிருத்திஞ்சயத்தினை உபதேசித்தான். 12
உவமை அற்றவன் உரைத்த மந்திரம்
செவி மடுத்தலும் சிற்றுணர்ச்சிபோய்ப்
பவம் அகற்றிடப் படுக் கரிக் குரீஇ
கவலை விட்டரன் கழல் வழுத்தும் ஆல். 13
எண் இலா உயிர்க்கு இறைவ போற்றி வான்
தண் நிலா மதிச் சடில போற்றி என்
புண்ணியப் பயன் போற்றி அம் கயல்
கண்ணி நாத நின் கருணை போற்றி ஆல். 14
தெளிதல் இன்றியே செய்த தீமையால்
விளியும் என்னையும் ஆளல் வேண்டுமோ
எளியர் எங்கு உளார் என்று தேர்ந்து தேர்ந்து
அளியை ஆவது உன் அருளின் வண்ணமே. 15
உம்மை நல் அறம் உடைய நீர்மையால்
இம்மை இம் மனு இயம்பினாய் இது
அம்மை நல் நெறிக்கு ஏது ஆதலான்
மும்மையும் நலம் உடைய மொய்ம்பினேன். 16
ஆயினும் எனக்கு ஐய ஓர் குறை
தீய புள் எலாம் ஊறு செய்து எனைக்
காயும் மனமும் கழியக் கண்ட பேர்
ஏ எனும் படிக்கு எளியன் ஆயினேன். 17
என்ன அக் குரீ இயம்ப எம்பிரான்
அன்ன புட்கு எலாம் வலியை ஆகெனப்
பின்னும் அக் குரீஇ தாழ்ந்து பேதை யேற்கு
இன்னும் ஓர் வரந் தருதி என்றதால். 18
வலியை என்பது என் மரபினுக்கு எலாம்
பொலிய வேண்டும் எப்போதும் நீ சொன
ஒலிய மந்திரம் ஓதி ஓதி நாங்
கலியை வெல்லவும் கருணை செய்கென. 19
ஆவது ஆக என்று அமரர் நாயகன்
மூ எழுத்தினான் முடிந்த அம்மனு
தாவி தெய்வதம் இருடி சந்தமோடு
ஓவில் ஓசை மூன்று ஒடு தெருட்டினான். 20
குரு மொழி பயின்று முள் வாய்க் குருவி தன் குலனும் தன் போல்
அரு மறை முதல்வன் ஈந்த ஆற்றலால் பறவைக்கு எல்லாம்
பெருமை சால் வலியான் என்னும் பெயரவாய் உலகின் மன்னக்
கருமணி கண்டன் செம்பொன் கனை கழல் அடி சேர்ந்த அன்றே. 21
இக்கரிக் குருவி தான் நோற்று எய்திய வரத்தைத் தன் போல்
ஒக்கலும் எளிதாய் எய்தப் பெற்றதால் உலகின் மேன்மை
தக்கன் ஒருவன் வாழத் தன் கிளை வாழ்வது என்ன
மிக்கவர் எடுத்துக் கூறும் பழமொழி விளக்கிற்று அன்றே. 22
ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் எளியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு உடையார் போல் வலியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் எளிதாய் திரிந்த இக் கயவாய் ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் வலிது ஆயிற்றே எவ்வுயிர்க்கும். 23
2 comments:
கருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் அந்தக் கதையை அறிந்தேன். நன்றி சிவமுருகன்.
அண்ணா,
//கருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் அந்தக் கதையை அறிந்தேன். நன்றி சிவமுருகன்//
இதை எழுதும் வரை எனக்கும் தெரியாது, நானும் புராணைத்தை படித்து இருதினங்களில் இக்கதையை பதித்தேன்!
மிருத்துஞ்சய மந்திரத்தை உபதேசித்தார் சொக்கேசர் என்று குறிப்புள்ளது! - இதுதான் அதை அறியும் அவா!
தற்சமயம் நாரைக்கு முக்தி அளித்த படலம் படித்துக்கொண்டிருக்கிறேன்!
:-).
Post a Comment