Tuesday, April 19, 2011

அழகர் எத்தனை அழகரடி!


மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகர் பின்னர் வெய்யிலிலேயே பல மண்டபகப்படிகளுக்கு விஜயம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உச்சி வெயிலின் போது தீர்த்தவாரி மண்டபகப்படிக்கு வந்த அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்


ராமநாதபுரம், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை விழாவையொட்டிசுவாமி கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றில் இறங்கினார்.


விருதுநகர், சாத்தூர் வைப்பாற்றில் கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்

சித்திரைவிழாயொட்டி குதிரை வாகனத்தில் வந்த அழகர் அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

குறிப்பு : தலைப்பு மட்டும் தான் என் எழுத்தில் படங்கள் செய்திகள் தினமலரிலிருந்து!

Wednesday, April 06, 2011

சித்திரை திருவிழா - கோலாகல ஆரம்பம்


சித்திரை திருவிழா - கோலாகல ஆரம்பம்

இன்று முதல் சித்திரை திருவிழா கோலாகல ஆரம்பம்.



முதல் நாள் : 07.04.2011 கொடியேற்றம்

காலை : கொடியேற்றம்,
மாலை கற்பக விருட்சம் - சிம்ம வாகனம்




இரண்டாம் நாள் :08.04.2011

காலை : தங்க சப்பரம்
மாலை : பூத - அன்ன வாகனம்






மூன்றாம் நாள் :09.04.2011

காலை : தங்க சப்பரம் - மாசிவீதி
மாலை : இராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனு - மாசிவீதி




நான்காம் நாள் :10.04.2011

காலை : தங்க பல்லாக்கு, வில்லாபுரத்தில் பாகற்காய் தோப்பு
மாலை : தங்க பல்லாக்கு - சித்திரை வீதி



ஐந்தாம் நாள் :11.04.2011

காலை : தங்க சப்பரம் - இராமாயணச் சாவடி
மாலை : தங்ககுதிரையில் கோவிலுக்கு திரும்புதல்


ஆறாம் நாள் :12.04.2011

காலை : தங்க சப்பரம் - மாசிவீதி
மாலை : தங்க இடப வாகனம் - மாசிவீதி


ஏழாம் நாள் :13.04.2011

காலை : கங்காள நாதர் புறப்பாடு - (பிக்ஷாடனார்)
மாலை : அதிகார நந்தி - யாளி வாகனம்

எட்டாம் நாள் : 14.04.2011
காலை : தங்க பல்லக்கு
மாலை : மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

ஒன்பதாவது நாள் : 15.04.2011
காலை : மரவர்ண சப்பரம்
மாலை : இந்திர விமானத்தில் - திக் விஜயம்

பத்தாம் நாள் : 16.04.2011
காலை : வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் பவனி, பின் ஆடி வீதியில் திருக்கல்யாண வைபவம்
மாலை : யானை & பூப்பல்லாக்கு

11வது நாள் : 17.04.2011
காலை : திருத்தேர்
மாலை : சப்தாவர்ண சப்பரம்

12 வது நாள் : 18.04.2011

மாலை : இடப வாகனத்தில் எழுந்தருளி தேவேந்திர பூஜை (திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோவில்)

காலை :அழகர் புறப்பாடு
மாலை : தல்லாகுளத்தில் எதிர் சேவை

13வது நாள் : 19.04.2011
காலை :அதிகாலை 6.30 க்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் எழுந்தருளல்

14வது நாள் : 20.04.2011
காலை :சேஷ வாகனத்திலும், கருட வாகனத்திலும் காட்சி, மண்டூக மகரிஷிக்கு மோட்சம்

15வது நாள் : 21.04.2011
மாலை : தசாவதாரக் காட்சி

16வது நாள் : 22.04.2011
மாலை : புஷ்ப பல்லாக்கு

17வது நாள் : 23.04.2011
காலை :மூன்று மாவடியிலிருந்து மலைக்கு திரும்புதல்


18வது நாள் : 24.04.2011
காலை : அதிகாலை கோவிலை அடைதல்


Sunday, March 06, 2011

Friday, January 28, 2011

மீனாக்ஷி அம்மன் அர்ச்சனை



மீனாக்ஷி அம்மன் அர்ச்சனை தமிழில்
டெக்சாசில் அருள் பொழியும் மீனாட்சி அம்மன்

Sunday, January 23, 2011

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்

முந்தைய பதிவில் திக் விஜய காட்சியை மூலிகை ஓவியத்தில் காட்டியிருந்தேன். யார் யாரென தெரியவில்லை என்று என்னுடைய நன்பர்கள் கேட்க அதை விவரிக்க இப்பதிவு இட்டிருந்தேன், தற்போது புதிதாக ஒரு மடிகணினி வாங்கி அதில் ஒரு நல்ல இடுகை செய்ய ஒரு நல்ல சுட்டி தேடியவேளையில் இன்றுகாலை இப்படம் கண்ணில் பட்டது உடனே பதித்து விட்டேன். தேச மங்கையர்கரிசி அவர்கள், தம் பாணியில் மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருகல்யாணத்தை விவரிக்கும் அசைபடம் இப்பதிவில்.

மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாடாக, திசையாக செல்வதை அவர் சொல்லி கேட்க வேண்டும்! கேளுங்களேன்!

திக் விஜய நாளன்று இந்த காட்சி மதுரை மாசி விதிகளில் நடக்கும். அம்மன் சந்நிதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - சூரிய பகவான், கீழ மாசி வீதி - தெற்க்கு மாசி வீதி சந்திப்பில் (மஹால் வடம் போகி தெருவில்) - அக்னி பகவான், தென்திருவாலவாய் சுவாமி கோவில் வாசலில் - எம தருமன், தெற்கு - மேற்கு மாசிவிதி சந்திப்பில் - பித்ரு, மேல மாசிவிதி திண்டுக்கல் ரோடு சந்திப்பில் - வருண பகவான், மேற்கு - வடக்கு மாசி வீதி சந்திப்பில் - வாயு தேவன், வடக்கு கிருஷ்ணன் கோவில் அருகில் - குபேரன் மற்றும் வடக்கு மாசி வீதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - ஈசானன். பின் கீழமாசி வீதியில் சொக்கநாத பெருமானுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் நேர் எதிர் நடக்கும் திருக்காட்சி கண்கொள்ளா காட்சி.

அதே போன்ற அனைத்து வித கடவுளரும் வரும் ஒரு ஓவியம். அழகாக படமாக்கியுள்ளார் பிரபு என்ற கலைஞர்.




சூரிய பகவான் - மேலிருந்து மூன்றாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
அக்னி பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம்.
எம தருமன் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
பித்ரு - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம்.
மழை கடவுளான வருண பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து கடைசி கட்டம்.
வாயு தேவன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம்.
குபேரன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
மற்றும்
ஈசானன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம்.

என்ற அஷ்ட திக்கு பாலகர்களை மூலிகை ஓவியத்தில் திக்கு விஜயம் செய்யும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.







Monday, January 10, 2011

ஆரியன்காவு உற்சவம்


அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்,
கடந்த 26.12.2010 அன்று தர்ம சாஸ்த - புஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அன்றைய நிகழ்வுகளை சன் டீவி தமது தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளனர். தவறவிட்டவர்களுக்காக.இங்கே !
கீழே வர்ணனை வார்த்தைகளை அளித்தவர் " வலைச்சர ஆசிரியர் சீனாஅய்யா " அவர்கள்!

கடந்த 09.01.2011 ஞாயிறு அன்று சன் தொலைக்காட்சியில் காலை 08:30க்கு தெய்வ தரிசனம் - 128ல் - ஆரியங்காவுதர்ம சாஸ்தா - புஷ்கலா தேவி திருக் கல்யாண உற்சவ நிகழ்சிகள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
செண்டை மேளம் முழங்க வேடம் புனைந்த கலைஞர்கள் நடனத்துடன் துவங்கிய நிகழ்ச்சி - கோவிலையும், பரிவார தேவதைகளையும், உற்சவ மூர்த்திகளையும், மூலவர் தர்மசாஸ்தா மற்றும் புஷ்கலா தேவியையும் அழகாகப் படம் பிடித்து ஒளிபரப்பினர்.
கருப்பா நதி, கருப்பண்ண சாமி, கருப்பாயி, என அழைக்கப்படும் காவல் தெய்வம் முறுக்கிய மீசையுடன் உயர்த்திய வாளுடன் காட்சி அளித்தார். நாக சன்னிதியில் நாகம்மாள் காட்சி அளிக்கிறார்.
பெண் வீட்டார் தாலிக்கொடி ஊர்வலத்தில் தீபம் ஏற்றிய தட்டுகளுடன் மாப்பைள்ளை அழைப்பு நடத்தியது காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீராஞ்சனம், தேங்காயில் நெய் தீபம், மணமகள் ஊஞ்சல் தரிசனம் இவற்றுடன், சௌராஷ்ட்ர மக்கள் - சம்பந்தம் செய்வதற்கு - பெண் வீட்டாராகச் சென்று திருமணத்தை நிசயம் செய்வது, சீர் கொண்டு செல்வது, சப்பர ஊர்வலம், மாலை மாற்றுதல், தாலி பூஜை, மாங்கல்ய தாரணம், என அனைத்து நிகழ்வுகளையும் அழகாகப் படம் பிடித்து தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் காணும் வண்ணம் ஒளி பரப்பியது நன்று.
மணமகள் -புஷ்கலாதேவிக்கு அணிவித்த பல மாங்கல்யச் சரடுகள் - பிரசாதமாக - பொதுமக்களுக்கு வ்ழங்கப் பட்டது. திரு மணம் ஆகாத பெண்கள் வாங்கிக் கொண்டால் 21 தினங்களில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
காலை ஒரு பொழுது மங்களகரமாகச் சென்றது - எங்கும் தனித்துக் காணப்படும் ஐயப்பன் ஆரியங்காவில் மட்டும் தான் தம்பதி சமேதராக புஷ்கலா தேவியாருடன் காட்சி அளித்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்காட்சியினைக் காணப் பரிந்துரைத்த நண்பன் சிவ முருகனுக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய ஆசிகள்.
நன்றி !

Saturday, November 27, 2010

மதுரை முனிகள்

சர்வேஸ்வரன் கைலாயத்தில் இருந்து வரும் சமயம் அவர் தம்மோடு முனிக்களையும் அழைத்து வந்ததாக மீனாட்சி அம்மன் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது! அதில் சில முக்கிய முனிகளை பற்றி இங்கே காணலாம்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து பல மைல் தூரத்தில் இருந்தாலும் இவர் மதுரையில் மிக மிக பிரபலமான முனி. ஆம் அவர் தான் பாண்டி முனி.






(நக்கீரன் இணையதளத்திலிருந்து)

ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் :



தனிகோவிலில் வினாயகர், முருகன், மற்றும் நாகர்கள் நடுவே, வட்டக்கல் நட்ட தெய்வமாய், இருந்தவர் உருவம் கண்டு, யோகத்தில் அமர்ந்து காவல் தெய்வமாய் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் தீர்த்த பிரசாதம் தருவது குறிப்பிடத்தக்க்து.








விட்டவாசல் முனீஸ்வரர்



இவர் புதுமண்டபதிற்க்கு கிழக்கே எழுகடல் தெருவில் கிழக்கு காவல் முனியாக இருக்கிறார். மூன்றடி ஆழத்தில் இறங்கிச் சென்றுதான் இவரை வணங்க முடியும்.



வடக்கு வாசல் முனீஸ்வரர்,





இவர் வடக்கு கோபுரத்திற்க்கு அருகில், தனி சன்னிதியில், தன் பரிவார தெய்வங்களுடன் அருள் தருகிறார்.சித்திரை திருவிழா சமயத்தில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு இங்கிருந்தான் சந்தனம் செல்வது குறிப்பிடத்தக்கது. மதுரையை சார்ந்த நான்கு வீட்டு சகோதரர்கள் முறைமாற்றி இக்கோவிலை நிர்வகிக்கின்றானர்.





மேற்க்கு வாசல் முனீஸ்வரர்
மேற்க்கு பகுதியில் திண்டுக்கல் ரொட்டில் அபய வரத மூர்த்தியாக ஜடாமுனீஸ்வரர் வீற்றுள்ளார்.


முனிகளின் மேலதிக தகவல்கள்
http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=491

http://www.jeyamohan.in/?p=4645

Monday, October 12, 2009

அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் உலா!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பற்றி ஒரு இணையதளம் உருவாகி உள்ளது!

இத்தளத்தில் இருக்கும் படங்கள் சாதரணமாக உலக அதிசயங்கள், சினிமா ஒளிப்பதிவுகளில் மட்டுமே நாம் பாத்திருக்கக்ககூடும், அதே போன்ற படங்கள் எம் அன்னையின் ஆலயத்தையும் பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.

25க்கும் மேற்ப்பட்ட முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

இதில் முக்கியமாக நான் பார்த்து மெய்சிலிர்த்த இடம் கம்பத்தடி மண்டபம். இம்மண்டபத்தை இதைவிட அழகாக முற்றிலும் அணு-அணுவாக வேறெங்கும் தரிசிக்க முடியாது.

நீங்களும் கண்டு ஆனந்திக்க இங்கே சொடுக்கவும் அல்லது இங்கே.

Wednesday, July 15, 2009

பள்ளியறை பூஜை! - அசைபடம்



மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடக்கும் பூஜையொன்றை முந்தய பதிவில் இட்டேன்!


இன்னும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.

எல்லாகோவிலிலும் முதலில் சுவாமிக்கு தான் தீபஆராதனை மற்றும் எல்லாவித புஜைகள் செய்வர். ஆனால் மதுரையில் முதலில் அம்மனுக்கு தான் பூஜை செய்வது வழக்கம். இதற்க்கு பல வித காரணங்கள் உள்ளன.



1. மீனாட்சி அம்மன் முதலில் மதுரையை ஆண்ட சமயத்தில் எல்லா வித மரியாதைகளும் அவருக்கே முதலில் செய்யப்பட்டதாகவும் காலப்போக்கில் அதுவே வழி வழியாக வந்ததாகவும் சொல்லப்படுகிறது

2. மனைவியானவள் கணவனுக்கு முன்பாக எழுந்து தயாராகி கணவனுக்கு பணிவிடை செய்து எழுப்பவேண்டும் என்ற நியதியை கடைப்பிடிக்க இவ்வாறு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இப்பொழுது மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறோம்.

இரவு 8:00 மணியளவில் அம்மன் சன்னிதி திரையடப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வெள்ள மலர்களாலும், மற்றும் வென்நிற பட்டு சாற்றியும் அருட்காட்சி தருவாள் அன்னை அங்கயர்கண்ணி.

மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வென்பட்டால் அம்மன் அலங்கரித்து தரும் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

அவ்வாறு காட்சி தரும் அன்னையை தரிசித்தால் கையில் கிளியேந்திய கலைவாணி இவளே தான் என்றும் சிலர் சத்தியம் செய்து விடுவர், இவரே தான் அந்த வேதமாதாவோ என்றும் தோன்றக்கூடும்!

பிறகு இரவு 9.15 மணியளவில் நடக்கும் பள்ளியறை பூஜையின் போது சுவாமி பல்லக்கில், அம்மன் சன்னிதிக்கு எதிரில் வந்து நிற்பார். அவருக்கு பாதபூஜை நடக்கும். அவரது பாதபூஜையை கண்ணார கண்ட பக்தர்கள் அம்மன் சன்னிதிக்குள் ஓடுவர். முதல் நாள் எனென்று தெரியாமல் நானும் ஓடினேன். அது தான் இரவு கடைசி நேர பூஜை என்றும், பிறகு அடுத்த நாள் தான் அம்மனை தரிசிக்க இயலும் என்பது பிறகு தான் தெரிந்தது.அம்மனுக்கு செய்யும் இந்த தீபாரதனையில் மேலும் ஒரு விசேஷம் என்ன வென்றால் அம்மனுக்கு சூட்டபட்டிருக்கும் மூக்குதியானது எத்தனை தூரமாக நாம் நின்று கண்டாலும், மிகத் தெளிவாக தெரியும். காரணம் உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை, ஆகவே தான் இந்த மூக்குத்தி மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர் அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனை தரிசிக்கலாம். பலர் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிக்க முடியவில்லை என்று சொல்வர், சிரமம் பார்க்காமல் இந்த பூஜைக்கு சென்றால் நிச்சயம் அம்மனை தரிசிக்க இயலும்.

ஒரே நாளில் தானே இச்சா, கிரியா மற்றும் ஞானசக்தியாக அருள்பாலிக்கும் அன்னையை தரிசித்து வருவோம்.

From Meenakshi Temple
இச்சா-சக்தி(காலை பொழுதில் - 11.00 மணியளவில்).

From Meenakshi Temple
கிரியா-சக்தி (மாலை பொழுதில் மாலை 4-4.30 மணியளவில்).

From Meenakshi Temple
ஞான-சக்தியாக (இரவு பொழுதில் - 8.00 மணியளவில்).




இந்த பாதபூஜை அம்மன் தானே செய்வதாக ஐதீகம்.

யூட்யுப் கொஞ்சம் அசைபடங்களை தருகிறது. 50க்கும் மேற்பட்ட பள்ளியறை அசைபடங்களை அதில் காணமுடிந்தது, அதில் சற்று துல்லியமான அசைபடங்களை தரிசிக்கவும், நீங்கள் நேரிடையாக சென்று வந்த மனநிலையை தரும் என்று நம்புகிறேன்.












Monday, July 13, 2009

பள்ளியறை பூஜை! - தேவ தேவோத்தமா!

அங்கயர்கண்ணி அன்னை மீனாட்சி நாள் தோறும் பல பூஜைகளையும் பல தரபட்ட அலங்காரங்களும் தந்தருள்கிறாள்.

திருவிழா மற்றும் திருப்பரங்குன்றத்திற்க்கு பயணம் எனும் போது மட்டும் ஒரு சில வகை பூஜைகள் நடக்காமல் இருந்து விடுகிறது. ஆனால் வருடத்தில் 365 நாட்களும் இடைவிடாது நடக்கும் ஒரே பூஜை இந்த பள்ளியறை பூஜை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை.

வருடத்தில் 5 தினங்கள் கோவிலின் நடை சாத்தப்பட்டு இருந்தாலும் சுவாமியும், அம்மனும் திரும்பி இந்த பூஜையில் நிச்சயமாக அருள்பாலிப்பர்.

சிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இரவு வெகுநேரம் நடை திறந்திருந்தாலும் அதிகாலை 3-4 மணியளவில் இப்பூஜைகள் நடக்கும்.

அதே போல் தெப்பதிருவிழா மற்றும் திருபரங்குன்றத்து குமரனுக்கு திருக்கல்யாண உற்சவநாளும் முதல் நாள் இரவே இப்பூஜைகளை கண்டு இரவு முழூவதும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

அத்தகைய பூஜை படங்களை வலையேற்றம் செய்யாமல் இருந்தது ஒரு சிறிய குறையிருந்தது அதை தற்போது தீர்ந்து விட்டது.

முதல் நாள் இரவு சுவாமி தன் சன்னிதியில் இருந்து கிளம்பி வெளியே வருவார்! பிறகு கம்பத்தடி மண்டபத்திற்க்கு முன்னால் இருந்து, சமயக்குறவர்கள் சன்னிதியில் ஓதுவார்கள் தேவார பதிகம் பாடலிசைக்க பயணம் அம்மன் சன்னிதி நோக்கி தொடரும்.

பின் முக்கூருனி விநாயகருக்கு அருகில் தீபஆராதனையும் - அம்மன் சன்னிதி நுழைவாயிலில் பாதபூஜை நடக்கும். சுவாமி பல்லக்கில் இருந்த வாரே அம்மன் சன்னிதிக்குள் செல்வார், பிறகு திருமலை நாயக்கர் சன்னிதிக்கருகில் ஒரு முறை தீபாராதனை காட்டுவர், கடைசியாக பள்ளியறை எதிரில் இருக்கும் வாசல் வழியாக நேரே பள்ளியறைக்குச் செல்வார்.

அவ்வாறு செல்லும் சமயம், ஓதுவார் ஒருவர்

"தேவ தேவோத்தமா

தேவதா சர்வ தோமா

ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகாச் சரிகா!

பார்வதிப் பிரிய நாயகாச்சரிகா

பாண்டியமண்டாலிதிபாச் சரிகா

சோமாநாத பாண்டிய மஹாராஜா பராக்!"


என்று பராக் சொல்ல, பல்லக்கில் இருந்து திருவாச்சி சமேதமாக இருக்கும் சோமசுந்தர கடவுளின் பாதுகை பள்ளியறை நோக்கி செல்லும்!

பின் தீப தூப ஆராதனைகள் ஆரம்பமாகும்

தீபங்களில் 16 வகை உண்டு.
தூபம், மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம், புருஷா மிருக தீபம், ஓலதீபம், கமடதி தீபம், கணு தீபம், வியான்ர தீபம், சிம்ம தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம்

ஆகிய 16 வகை தீபஆராதனைகள் செய்வித்து! அப்பனும் அம்மையும் உளமகிழ்ந்து பொன்னூஞ்சலில் அமர்ந்து அருள்பாலிப்பர்.

தீபஆராதனைகளனைத்தும் முடிந்தவுடன், கூடியிருக்கும் அவரடியவர்கள்

"பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து!
பொன்னூஞ்சலில் பூரித்து,
பூஷனங்கள் தரித்து!
ஈசனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து

கண்ணூஞ்சல் ஆடுகின்றாள்

காஞ்சனமாலை
மயிலாள்
பொன்னூஞ்சல் ஆடுகின்றாள்...


பூலோக கைலாச,
பூலோக கைலாச

புண்ணியமா ம மதுரா,
புண்ணியமா ம மதுரா

ஆகாச சுந்தரேசா,
ஆகாச சுந்தரேசா

சதானந்தமே கண்மலராய்!



இந்திரயங்கள் பூஜிக்க,
சங்கரியும் பூரித்து
மங்களத்தாம்பூலம் ஆற்றினாள் - தேவி
தங்க கதவை மெல்ல சாற்றினாள்!"


என்று பாடலிசைக்க, விசிறி ஆட்டம் கண்டு, பின் ஊஞ்சல் ஆடி அப்பனும் அம்மையும் அருள்பாலித்து நடையை சாற்றுவர்!















































எப்போதும் போல் படங்கள் இணைய தொக்குப்பே...

பாடல்கள் நேரடியாக நானே கேட்டு, பாடியவை.

கொசுறு : ஒவ்வொரு முறையும் என் காது பட யாரேனும் ஒருவர் "இன்று தான் இந்த காட்சியை கண்ணார காண முடிந்தது" என்று கூறிவிடுவர்'



மூலிகை ஓவியத்தில் திருக்கல்யாண காட்சி


































Tuesday, September 30, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - மூலிகை ஓவியங்கள்

மூலிகை ஓவியங்கள் - 6

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளக்கரையில் வரையப்படும் மூலிகை ஓவியங்களை காட்டும் தொடர்.

பிட்டுக்கு மண் சுமந்த காட்சி.