Tuesday, September 30, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - மூலிகை ஓவியங்கள்

மூலிகை ஓவியங்கள் - 6

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளக்கரையில் வரையப்படும் மூலிகை ஓவியங்களை காட்டும் தொடர்.

பிட்டுக்கு மண் சுமந்த காட்சி.

Saturday, September 27, 2008

கோவில்களும் மன்னர்களும்

கூகிள் விடியோவில் கிடைத்த ஒரு அருமையான படம், நேற்று முன்தினம் இதே குறும்படத்தை டிஸ்கவரியில் காண நேர்ந்தது! அதை நீங்களும் காண பதிக்கிறேன். இது தரவிறக்கம் ஆக 30 நிமிடமாவது ஆகும்.மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - மூலிகை ஓவியங்கள்

மூலிகை ஓவியங்கள் - 5

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளக்கரையில் வரையப்படும் மூலிகை ஓவியங்களை காட்டும் தொடர்.

வன்னியும் கிணறும் இலிங்கமும்

இறைவன் செய்த பல லீலைகளில் இதுவும் ஒன்று.திருப்புறம்பயம் என்ற தலத்தில், தன் தங்கை மகளுடன் வந்தடைந்த காவிரிப் பூம்பட்டினத்து வணிகன் அரவு கடித்து இறந்துபோக, சிவபெருமான் அவனுக்கு உயிர் அளித்ததோடு அவனுக்கு அப்பெண்ணைத் திருமணம் புரிவித்தார். அப்பெண் மதுரையில், அவளது கணவனின் முதல் மனைவியால் பழிக்கப்பெற்றபோது, வன்னி, கிணறு, மடைப் பள்ளி இவைகளோடு வந்து இலிங்கமாக சாட்சிபகர்ந்தார் சாட்சிநாதர். வணிகப் பெண்ணின் பொருட்டுச் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி பகர்ந்தததை உணர்த்தும் நாடகம் ஒன்று இவ்வூரில் வைகாசிமாதத்தில் நடைபெறுகின்றது. அதை மக்கள் `வன்னி நாடகம்` என்று கூறுகின்றனர்.

(திருப்புறம்பயம் - கும்பகோணத்திற்கு வடமேற்கே 9 கி.மீ. தூரத்தில் மண்ணி யாற்றின் வடகரையில் இருக்கின்றது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.)64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்
3256. சென்னி வெண் திங்கள் மிலைச்சிய சிவன் அருள் அடைந்த சம்பந்தர்
துன் இரும் சமணனைக் கழுமுனை ஏற்றித் துணித்த வாறு இசைத்தனம் வணிகக்
கன்னிதன் மன்றல் கரியினை மாற்றாள் காண அக் கண் நுதல் அருளால்
வன்னியும் கிணறும் இலிங்கமும் ஆங்கு வந்தவாறு அடுத்தினி உரைப்பாம்.

3257. பொன் மலர்க் கைதை வேலி சூழ் வேலைப் புறத்து ஒரு பட்டினத்து உள்ளான்
மின் மணிக் கொடும் பூண் ஒரு குல வணிகன் வேறு வேறு ஆம் பல செல்வத்
தன்மையில் சிறந்தோன் மகவு இலன் ஆகித் தன் மனக்கு இனியது ஓர் காட்சி
நன் மனைக் கொடியோடு அறம் பல புரிந்தோர் நகை மதிக் கொம்பை ஈன்று எடுத்தான்.

3258. அத்தன வணிகற்கு உரிய நன் மருகன் அவன் முதற் கடிமணம் முடித்தோன்
முத்தமிழ் மதுரைப் பதி உளான் அவற்கே முறையினால் நோற்று நான் பயந்த
வித்தக மயிலைக் கொடுப்பல் என்று அனைய இயற் குல வணிகர் கோன் தன்னோடு
ஒத்த பல் கிளைஞர் யாவரும் அறிய உணர்த்தினான் சில பகல் ஒழிய.

3259. ஊழ்வினை வலியால் ஆருயிர் இழந்தான் உயிர்க்கு உடம்பு அனைய தன் கற்பின்
சூழ் கதிர் மணிப் பூண் மனைவியும் இறப்பத் துணிந்தனள் அவர் இருவோர்க்கும்
ஆழ் கடல் கிளைஞர் செயத் தகு கடன்கள் ஆற்றியச் செய்தியை மதுரை
வாழ்தரு மருகற்கு உணர்த்துவான் ஓலை விடுத்தனர் மருமகன் வாங்கா.

3260. தன் அருள் மாமன் துஞ்சினான் கூடத் தாரமும் துஞ்சியது இப்பால்
அன்னவற்கு அளவு இன்று ஆகிய தனம் உண்டு அவனனி நாண் மகவு இன்றிப்
பின் ஒரு பெண்ணைப் பெற்றனன் அவளைத் தனக்கு எனப் பேசினான் அனைய
கன்னியை மணந்து செல்க என முடங்கல் கழறிய பாசுரம் தெரியா.

3261. வீழ்ந்தனன் தரை மேல் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினன் விழிப்புனல் வெள்ளத்து
ஆழ்ந்தனன் விம்முற்று அம்மவோ என்று என்று அரற்றினான் கிளைஞர் நட்பு அடைந்து
வாழ்ந்தவர் தழுவத் தழீஇத் தழீஇக் கரைந்தான் மற்றவர் தேற்றிடத் தெந்து
சூழ்ந்த வெம் துயர் நீத்து ஒரு தலை மாமன் தொல் நகர்க்கு கேகுவான் துணிந்தான்.

3262. அங்கு உள கிளைஞர் சிலரொடும் கூடி அரும் கடி மதுரை நீத்து ஏகிப்
பொங்கிரும் காழி சூழ் பட்டினம் குறுகிப் புகுதுவான் வரவு அறிந்து அங்குத்
தங்கு தம் கிளைஞர் வினவ நேர் வாரைத் தழீஇத் தழீஇச் செலவிடுத்து ஏகிக்
கொங்கு இவர் தளவத் தாரினான் மாமன் கோயில் புக்கு இருந்தனன் ஆக.

3263. நாள் சில கழிந்த பின்னர் நாய்கர் ஏறு அனையான் அன்ன
வாள் புரை கண்ணியானை மதுரையில் கொடுபோய் அங்கு என்
கேளிர் முன் வேட்பல் என்று கிளந்து தன் மாமன் ஈட்டு
நீள் பெரும் பொருள்கள் மற்றும் கைக் கொண்டு நெறியில் செல்வான்.

3264. வழிவிட வருவார் தம்மை நிறுத்திப் பின் மதுரை மூதூர்க்கு
எழுதரு சுற்றத்தாரை முன் சென் மின் என்று போக்கித்
தொழு பரிசனமும் தானும் தோகையும் வைகல் ஒன்றில்
கழி வழி அரைமேல் பெய்த காவதம் ஆகப் போவான்.

3265. வெம் கதிர் வேலை செல்லும் வேலை வந்து அணையும் முன்னம்
இங்கிருந்து ஒழிகம் என்னாப் புறம் பய மூதுர் எய்தி
அங்கு இறை கோயில் முன்னிக் கூவல் நீராடி அங்குத்
தங்கிய வன்னி மாடே போனகம் சமைத்து உண்டு எல்
வாய்.

3266. மலை வைத்த சிலையான் கோயில் மருங்கு ஒரு படியின் உம்பர்
தலை வைத்துத் துயிலும் எல்லை விதிவழிச் சார வந்தோர்
கொலை வைத்த விடவாய் நாகம் கடித்தது கொதித்து நீண்ட
விலை வைத்த கொடும் பூண்நாயகன் விடம் தலைக் கொண்டு மாய்ந்தான்.

3267. அங்குள பரிசனங்கள் ஆவலித்து இரங்கிச் சூழக்
கொங்கைகள் புடைத்துச் சேடிக் குற்றிடை மகளிர் ஏங்கச்
சிங்க ஏறு அனையான் ஆகந் தீண்டிடாது ஒதுங்கிப் போந்த
பங்கய மலர்க் கொம்பு அன்னாள் பாவை போல் புறம்பு நின்றாள்.

3268. ஆளி ஏறு அன்ன அரவின் வாய்ப் பட்டதும் அவிந்ததும்
மீள வேல் உண் கணார் கை குலைத்து அழுவதும் விழுவதும்
கேளிர் சூழ்ந்து அயர்வதும் சோர்வதும் கண்டு இளம் கிகினாள்
வாளியேறு உண்டதோர் மயிலின் வீழ்ந்து உயங்கினாள் மயங்கினாள்.

3269. வடிக்கண் உள் செருகின அருகின உயிர்ப்பு அழல் வாய்ப் படும்
தொடுத்த பூம் கோதைபோல் சோர்ந்தது ஆக கரம் சோர்ந்தன
அடித்தளிர் சோர்ந்தன கன்னி அன்னப் பெடை அன்னவள்
இடிக்கு எதிர் பட்டு வீழ்ந்தாள் எனக் கிடந்தனள் என் செய்வாள்.

3270. சாயும் பூம் கொம்பரில் சூழ்ந்து இறந்தான் புறம் சார்ந்து அழூஉம்
ஆய மென் மகளிர் மீண்டு அன்பனோடு எங்கை தன் ஆவியும்
போயதே கொல் என மடியுறக் கொடும் கையால் புறம் தழீஇத்
தூய தூ செறிந்து இளைப் பாற்றினார் சிறிது உயிர் தோற்றவே.

3271. மெய் கழிந்து இன்னுயிர் மீண்டு தன் யாக்கையின் மெல்லவே
கை கலந்தாங்கு இரு காலி அங்கு உற்றன கண்களும்
பொய்கை நீலம் சிறிது அவிழ்ந்து என அலர்ந்தன பூவையை
மை கழி நாள் முதல் நான்கு நால் வேலியாய் வளைந்தவே.

3272. கை யெறியும் குழல் கற்றை சோரும் திரி காறுளி
நெய் எனக் கண் புனல் கொங்கை முற்றத்து உக நெஞ்சுகும்
பைய வாய் விடும் புறம் பார்க்கும் நாண் நெடும் தளைபடும் சிறு
தெய்வம் தொட்டாள் எனத் தேம்பி விம்மாந்து ஒளிதேயுமால்.

3273. வணங்கில் செல்வம் தழீஇப் பிறந்த நாள் தொட்டு தொகு வைகலும்
அணங்கு எனக் கனவிலும் கண்டிலாள் அன்பன் மேல் அன்பு எனும்
இணங்கு தன் உருவமாய் நிறைவரம் பிற்றென இருந்த ஒர் பெண்
அணங்கு வாய் விட்டு அழுதால் எனப் புலம்பல் உற்றாள் அரோ.

3274. என் நாயகனேயோ என் இரு கண்மணி யே யோ என்னை ஈன்றான்
தன் ஆவி அன்ன தனி மருகாவோ முருகாவோ தார் ஆர் முல்லை
மன்னாவோ வணிகர் குல மணியே யோ விடி அரவின் வாய்ப் பட்டாயோ
உன்னாக நிழலான என்னை விடுத்து எவ்வண்ணம் ஒளிப்ப தேயோ.

3275. பொன்னாட்டின் மட வாரைப் புணர் வதற்கோ நம் அளகா புரத்து வேந்தன்
நன் நாட்டின் மடவாரை மணப்பதற்கோ உனைக் கடித்த நாகர் வேந்தன்
தன் நாட்டின் மடவாரைத் தழுவுதற்கோ என் ஆவித் தலைவா என்னை
இந் நாட்டில் இருத்தி எனை வஞ்சித்துப் போயின வாறு என்னே என்னே.

3276. தென் உலகில் புகுந்தனையோ பணிந்தனையோ மாதுலனைத் தேவியோடும்
தன் இரு தோள் உற ஆரத் தழுவினனோ நானும் உடன் சார்ந்தேன் ஆகில்
என்னுரிய குரவரையும் கண்ணாரக் காணேனோ எனை ஈங்கு இட்டாய்
பின்னுரிய பரிசனமும் கைவிட்டாய் தனி போய் என் பெற்றாய் ஐயா.

3277. வரிசை மருமகன் அரவால் விளிந்தது நான் அறை போய மனத்தோடு இங்குப்
பரிவுறலும் எனைப் பயந்தார் நோற்ற பயன் நன்றாகப் பலித்ததே யோ
பெரித வரிக் கண் கலக்கம் காணாமுன் இறந்து அன்றோ பிழைத்தார் அந்தோ
அரியதிலும் அரிய பயன் இது அன்றோ எவர் பெற்றார் அவர் போல் அம்மா.

3278. உன் காதல் மாமன் எனைப் பயந்த அன்றே உறவு அறிய உனக்கே பேசிப்
பின் காதல் மனைவியொடும் உயிர் இழந்தான் யனும் அந்தப் பெற்றியாலே
என் காதல் உயிர் போக வெற்று உடம்போ இருக்கும் உடன் இறப்பேன் என்னாத்
தன் காதல் துணை இழந்த அன்றில் என விழுந்து அழுதாள் தமியள் ஆனாள்.

3279. நன் நகர் உறக்கம் நீங்கி நடுக்கம் உற்று அழுங்கக் காழித்
தென்னகர் ஞானச் செல்வர் சிவன் நகர் தொறும் போய்ப் பாடி
அந் நகர் அடைந்தார் ஆங்கு ஓர் அணி மடத்து இருந்தார் கேட்டு ஈது
என் என ஆள் விட்டு ஆய்ந்து கோயிலின் இடை வந்து எய்தி.

3280. கன்னி நீ யாரை உற்றது என் எனக் கன்னி தாழ்ந்து
தன் அரு மரபும் ஈன்றார் தம்மையும் மருகற்கு என்றே
உன்னினர் மன்றல் பேசியிறந்தது உயிர் அன்னானோடு
இந் நெறி அடைந்து ஈங்கு உற்ற நிகழ்ச்சியும் எடுத்துச் சொன்னாள்.

3281. தந்தையும் தாயும் அன்னார் தமியளாய் இரங்கும் பேதைப்
பைந் தொடி ஆவி காப்பான் பாம்பு கோள் பட்டான் மாடே
வந்தவன் ஆகம் எல்லாம் மருந்து உருவாகும் வண்ணம்
சிந்தை செய்து அருட்கண் வைத்தார் குதித்தது தீவாய் நஞ்சம்.

3282. எழுந்தனன் உறங்கினான் போல் இறந்தவன் யாரும் கண்டு
தொழும் தகை ஞான வேந்தைத் தொழுதனர் துதி செய்து ஆர்வத்து
அழுந்தினர் கன்னி அன்ன மனையவள் இன்பத் தீம்தேன்
பொழிந்து ஒரு புறத்தே கஞ்சம் பூத்த ஓர் கொம்பின் நின்றாள்.

3283. தலைவனை இறந்த போதும் தனி உயிர் பெற்ற போதும்
சிலை நுதல் காதல் மாமன் செல்வியாய் இருந்தும் தீண்டா
நிலைமையும் அன்பும் கற்பின் நீர்மையும் வியந்து நோக்கி
மலைமகள் ஞானம் உண்டார் வணிகனை நோக்கிச் சொல்வார்.

3284. வருதி நின் மரபுக்கு எல்லாம் மணிஅனாய் உன்றன் மாமன்
தரு திரு அனையாள் இன்பம் சாருநாள் துன்பம் வந்து
பெருகு நாள் அன்றி என்று உன் மெய் தொடப் பெருவள் ஈண்டே
திருமணம் முடித்துக் கொண்டு பேக எனச் செப்பலோடும்.

3285. செம் கண் ஏரு அனையான் ஐயன் திரு மொழி தலைமேல் கொண்டு
பங்கயன் படைத்த சாதி நான்கையும் பாது காப்பீர்
எம் குல வணிகர் இன்றிக் கரிகளும் இன்றி ஈங்கே
மங்கலம் முடிக்கும் வண்ணம் யாது என வணங்கிச் சொன்னான்.

3286. கன்னியை ஈன்ற ஞான்றே உனக்கு என்று உன் காதல் மாமன்
உன்னிய உறவின் உள்ளார் அறிவரே உனக்கு ஈது அன்றி
வன்னியும் கிணறும் இந்த இலிங்கமும் கரிகண் மைந்தா
இந் நிலை வதுவை செய்தி எம் உரை கடவாது என்றார்.

3287. மாசு அறு மனத்தான் காழி வள்ளலைப் பணிந்து நீரே
தேசிகர் குரவர் நட்டோர் தெய்வமும் கிளையும் என்னாப்
பேசிய வாறே வேள்வி பெற்றியான் இறீ இத்தான் வேட்ட
பாசிழையோடு தாழ்ந்து விடை கொடு பரவிப் போனான்.

3288. ஏவல் செய் ஆயத்தாரும் அடியரும் ஈண்ட ஈண்டிக்
காவல் செய் மதுரை மூதூர் குறுகித் தன் காதல் மாமன்
பூவையை மணந்த வண்ணம் கேட்டு அங்குப் புடைசூழ் சுற்றம்
யவரும் உவப்ப இன் புற்று இருந்தனன் இளங்கோ மன்னன்.

3289. தன் பெரும் தனமும் மாமன் ஈட்டிய தனமும் ஈட்டி
மன் பெரு நிதிக் கோன் என்ன வாணிகம் பெருக்கி நாய்கன்
இன் புறு காதலார்கள் இருவரும் ஈன்றகாதல்
நன் பொருள் மகிழ்ச்சி செய்ய நலம் பெற வாழும் நாளில்.

3290. மூத்தவள் சிறுவர் சால மூர்க்கராய் உள்ளார் ஏனை
மாத்தளிர் இயலினாட்கு ஓர் மைந்தன் உண்டு இவனும் அன்ன
தீத் தொழின் ஆக மன்ன சிறார்களும் அல்லல் செல்வம்
பூத்த நீள் நியமத்தூடு போய் விளையாடல் செய்வார்.

3291. முந்திய மணாட்டி மைந்தர் முகிழ் முலை இளைய பாவை
மைந்தனை ஒரு நாள் சீறி அடித்தனர் வருந்தி ஈன்ற
சந்தணி முலையாள் மாற்றாள் தனையரை வைதாள் ஈன்ற
பைந்தொடி தானும் சீறி இளையளை பழித்து வைவாள்.

3292. எந்தவூர் எந்தச் சாதி யார் மகள் யாவர் காணச்
செந்தழல் சான்றா எங்கோன் கடி மணம் செய்து வந்த
கொந்தவிழ் கோதை நீ என் கொழுநனுக்கு ஆசைப்பட்டு
வந்தவள் ஆன காமக்கிழத்திக்கு ஏன் வாயும் வீறும்.

3293. உரியவன் தீ முன்னாக உன்னை வேட்டதற்கு வேறு
கரி உளதாகில் கூறிக் காட்டு எனக் கழற லோடும்
எரி சுட வாடிச் சாய்ந்த இணர் மலர் கொம்பில் சாம்பித்
தெரி இழை நாணம் சாய்ப்ப நின்று இது செப்புகின்றாள்.

3294. அரவின் வாய்ப் பட்ட வைகல் ஆர் உயிர் அளித்த ஞானப்
புரவலர் அருளால் எம் கோன் புறம் பய நாதன் வன்னித்
தரு வொடு கிணறு காணச் செய்தனன் சாறு அம் மூன்று
கரிகளும் உள்ள என்றாள் கற்பினாள் ஒப்பிலாதாள்.

3295. மாற்று அவள் நகைத்து நன்று நின் மன்றல் வேள்விக்
ஏற்றன கரியே சொன்னாய் இங்கு உமக்கு கரிகள் மூன்றும்
தோற்ற மேல் அதுவும் மெய்யே என்றன தோகை யோடும்
வேற்றுமை இலாத சாயல் இளையவள் விழுமம் கூரா.

3296. வெவ் உயிர்ப்பு எறிய இல் போய் மெல் விரல் நெரிக்கும் கையால்
அவ் வயிறதுக்கும் வீழும் கண்புனல் வெள்ளத்து ஆழும்
கொவ்வை வாய் துடிக்கு நாணம் தலைக் கொளும் கூசும் மன்னோ
தெய்வமே ஆவாய் என்னும் என் செய் கேன் சிறியேன் என்னும்.

3297. தாதை தாய் இறந்த அன்றே தமியளாய் இங்குப் போந்த
பேதையேற்கு யார் உண்டு ஐய பேதுறும் வணிகற்கு அன்று
மாதுலன் ஆகி ஞாதி வழக்கு அறுத்து உரிமை ஈந்த
நாதனே ஏது இலாள் வாய் நகையினில் காத்தி என்னா.

3298. அன்று இரவு உண்டி இன்றித் துயில் இன்றி அழுங்கிப் பின் நாள்
பொன் திணி கமல வாவிப் புண்ணியப் புனல் தோய்ந்து அண்டர்
நின்று இழி விமானக் கோயில் நிரம் பிய அழகர் முன்னாச்
சென்று இரு தாளில் வீழ்ந்து தன் குறை செப்பி வேண்டும்.

3299. அன்று எனைக் கணவன் வேட்ட இடத்தினில் அதற்குச் சான்றாய்
நின்ற பைந்தருவும் நீயும் கிணறும் அந்நிலையே இங்கும்
இன்று வந்து ஏது இலாள் வாய் நகை துடைத்து எனைக் காவாயேல்
பொன்றுவல் என்றாள் கற்பின் புகழினை நிறுத்த வந்தாள்.
3300. அல்லல் உற்று அழுங்கி நின்றாள் பரிவு கண்டு அம் தண் கூடல்
எல்லை இல் கருணை மூர்த்தி அருளினால் எவரும் காணத்
தொல்லையின் படியே அன்னாள் சொல்லிய கரிகள் மூன்றும்
ஒல்லை வந்து இறுத்த கோயில் உத்தர குணபால் எல்லை.

3301. அன்ன போது இளையாள் மூத்தாள் கொண்டுபோய் ஆலவாய் எம்
முன்னவன் திருமுன் தாழ்ந்து காட்டுவாள் முகில் தோய் சென்னி
வன்னி ஈது இலிங்கம் ஈது கிணறு ஈது என்று மன்றல் சான்றாய்த்
துன்னிய என்றாள் கண்டாள் முடித்தலை தூக்கி நின்றாள்.

3302. அவ் இடைத் தருவும் நீரும் அன்றுபோல் இன்றும் சான்றாய்
இவ்விடைப் பட்ட என்ன அதிசயம் எவர்க்கும் தேறாத்
தெய்வமும் எளிவந்து அங்கைக் கனி இனித் திருவின் அன்னாள்
கைவ் வசப் பட்டது என்றால் கற்பினுக்கு அரிதே அம்மா.

3303. மங்கை தன் கற்பும் ஈசன் இடத்து அவள் வைத்த அன்பும்
அங்கணன் அவட்குச் செய்த அருளையும் வியந்து நோக்கி
மங்கல நகரார் எல்லாம் மகிழ்ச்சியுள் ஆழ்ந்தார் முல்லைத்
தொங்கலான் முது மணாட்டி ஒருத்தியும் துன்பத்து ஆழ்ந்தாள்.

3304. மேதகு வணிகர் மூத்த வினைக் கொடியாளைப் பொல்லாப்
பாதகி இவளாம் என்று பழித்தனர் படிறு பேசிக்
கோது அறு குணத்தினாளைக் குடிப் பழுது உரைத்தாய் நீ என்
காதலி ஆகாய் என்று கணவனும் தள்ளி விட்டான்.

3305. அந்நிலை இளையாள் கேள்வன் அடியில் வீழ்ந்து இரப்பாள் ஐய
என்னது கற்பை இன்று நிறுத்தினாள் இவண் மாற்றாளன்
அன்னை இலாதேற்கு அன்னை ஆயினாள் இவளும் யானும்
இன் உயிர் உடல் போல் வாழ்வோம் எனத் தழீத் தம்மின் நட்டார்.

3306. உடம்பினால் இரண்டே அன்றி உயிர்ப் பொருள் இரண்டு அற்று உள்ளம்
மடம் படு அழுக்காறு அற்று மைந்தரும் அனையர் ஆக
விடம் படு மைவாய் நாகம் விழுங்கிரை ஒத்துத் தம்மில்
இடம் படு அன்புற்று இன்புற்று இருவரும் இருந்தார் மன்னோ.

3307. அருந்ததி அனையாள் கேள்வற்கு ஆயுளும் ஆனாச் செல்வம்
பெருந்தன நிறைவும் சீரும் ஒழுக்கமும் பீடும் பேறு
அரும்தவ நெறியும் குன்றத் தருமமும் புகழும் பல்க
இருந்தனள் கமலச் செல்வி என்ன வீற்று இருந்து மன்னோ.

3308. பொன் அவிர் கமலம் பூத்த பொய்கை சூழ் ஆலவாய் எம்
முன்னவன் விளையாட்டு எல்லை கண்டு யார் மொழிய வல்லார்
இன்னமும் அளவின்று என்ப எம் குரு நாத சாமி
சொன்னவாறு உங்கட்கு எண் எண் காதையும் சொன்னேன் அம்ம.

3309. என்று தென் மலை மேல் இருந்த மாதவத் தோன் இன் அருள் குருபரன் தனையும்
அன்று அவன் திருவாய் மலர்ந்த வாசகமும் அருள் கனிந்து ஒழுக உள்ளடக்கித்
தென்தமிழ் ஆலவாய்த் தனிப் பதியைச் சென்னிமேல் பன்னிரண்டு உம்பர்
ஒன்ற வைத்து இமையா அம் கயல் கண்ணி உடன் உறை ஒருவனை நினைந்தான்.

3310. பரவசம் அடைந்து வழி கவர்ந்து உண்ணும் பழிப் புல வேடர் போய் ஒளிப்ப
இருள் வெளி கடந்து திருவருள் வழிச் சென்று எண் இலாச் சரா சரம் அனைத்தும்
புரை அற நிறைந்து காட்சி காண் பான் புதைபடத் தனித்த பூரணமாய்
உரை உணர்வு இறந்த உண்மை ஆனந்த உணர்வினை உணர்வற உணர்ந்தான்.

வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் சுபம்

அடுத்த பதிவு நரியை பரியாக்கி பிட்டுக்கு மண்சுமந்த படலம்

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - மூலிகை ஓவியங்கள்

மூலிகை ஓவியப்படங்கள் - 4

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளக்கரையில் வரையப்படும் மூலிகை ஓவியங்களை காட்டும் தொடர்.

தாருகா வனத்து முனிவர்கள் நடத்திய வேள்வி
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களில் இல்லங்களுக்குச் சென்றார். முனி பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார் மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆராதிரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது. நன்றி : விக்கிபீடியா.

பிக்ஷாடான மூர்த்தி: சிவனின் ஒரு ஸ்வரூபமான இவரும் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். ரிஷி, முனிவர்களின் பல்வேறுவிதமான கோரிக்கைகளுக்காகவும், செயல்களுக்ககவும் பல்வேறு ரூபங்களில் அவ்வப் போது சிவன் எடுத்த ஸ்வரூபங்களில் ஒன்று தாருகா வனத்து ரிஷிகளுக்கக அவர் எடுத்த பிக்ஷாடன ஸ்வரூபம். தாருகாவனத்து ரிஷிகளுக்காக சிவன் பிக்ஷாடனக் கோலத்திலும், விஷ்ணு மோகினிக் கோலத்திலும் நடனம் ஆடி ரிஷிகளின் அகம்பாவத்தைத் தகர்த்தனர். முதன்முதல் சிவன் பிக்ஷாடனக் கோலத்தில் தான் நடனம் ஆடியதாயும் அதுவும் தாருக்கவன ரிஷிகளுக்கு முக்தி கொடுப்பதற்காகவும், அதன் பின்னரே சிதம்பரம் சித்சபையில் பதஞ்சலி முனிவர், வ்யாக்ரபாதர் போன்றவருக்காக ஆடியதாயும் சொல்லப் படுகிறது. தெற்கே பார்த்து பிக்ஷாடனர் கோயில் கொண்டிருக்கிறார்.

நன்றி : http://www.thevaaram.org/

தற்போது குடமுழுக்கு வேலைகள் நடந்து வருகின்றது. கோவிலின் நெடிய கோபுரமான தெற்க்கு கோபுரம் தென்னங்கீற்றுகளால் மூடப்பட்டுள்ள காட்சி.அடுத்த பதிவு மூலிகை ஓவியத்தில் வன்னிமரம், சாட்சிக் கிணறு மற்றும் இலிங்கம்.

Friday, September 26, 2008

மீனாட்சி அம்மன் கோவில் - மூலிகை ஓவியங்கள்

மூலிகை ஓவியப்படங்கள் - 3


தேவேந்திர சாபவிமோசனம் - ஐராவத விமோசனம்

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளக்கரையில் வரையப்படும் மூலிகை ஓவியங்களை காட்டும் தொடர்.

தேவராஜன் இந்திரன், பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற வசிஸ்டர் கொடுத்த மாலையை ஐராவதத்தின் மீது வைத்து முனிவரை அவமதிக்கிறான், இச்செயலால் கோபபட்ட முனிவர் ’இந்திர பதவியை இழந்து வனத்தில் திரிய கடவது’ என்று சாபமிட, தான் செய்த வினைகளுக்கு பரிகாரமாக கடம்பவனத்தில் இருக்கும் சொக்கநாதருக்கு இந்திர விமானத்தை நிர்மானித்து, வணங்கி வர தான் சாபவிமோசனம் அடைகிறான். அதை காட்டும் காட்சிகள்.


இச்செயலுக்கு துணை சென்ற ஐராவத யானையும் தன் பாவங்களை தீர்க்க கடம்பவனத்தில் சொக்கநாதரை வணங்கும் காட்சி.
சொக்கநாதரை பற்றி ஆதி வாசிகளின் வாயிலாக கேட்ட ஐராவதம் சொக்கநாதரை வழிபட்டு கடைசியில் தேவராஜனை அடையும் காட்சி. (மேலிருந்து நான்காவது வரிசை, மூன்றாவதி கட்டம்)


அடுத்த பதிவு. தாருகா வனத்து ரிஷிகள் ஏவியது

Thursday, September 18, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்,

முந்தைய பதிவில் திக் விஜய காட்சியை மூலிகை ஓவியத்தில் காட்டியிருந்தேன். யார் யாரென தெரியவில்லை என்று என்னுடைய நன்பர்கள் கேட்க அதை விவரிக்க இப்பதிவு.

திக் விஜய நாளன்று இந்த காட்சி மதுரை மாசி விதிகளில் நடக்கும். அம்மன் சந்நிதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - சூரிய பகவான், கீழ மாசி வீதி - தெற்க்கு மாசி வீதி சந்திப்பில் (மஹால் வடம் போகி தெருவில்) - அக்னி பகவான், தென்திருவாலவாய் சுவாமி கோவில் வாசலில் - எம தருமன், தெற்கு - மேற்கு மாசிவிதி சந்திப்பில் - பித்ரு, மேல மாசிவிதி திண்டுக்கல் ரோடு சந்திப்பில் - வருண பகவான், மேற்கு - வடக்கு மாசி வீதி சந்திப்பில் - வாயு தேவன், வடக்கு கிருஷ்ணன் கோவில் அருகில் - குபேரன் மற்றும் வடக்கு மாசி வீதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - ஈசானன். பின் கீழமாசி வீதியில் சொக்கநாத பெருமானுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் நேர் எதிர் நடக்கும் திருக்காட்சி கண்கொள்ளா காட்சி.

அதே போன்ற அனைத்து வித கடவுளரும் வரும் ஒரு ஓவியம். அழகாக படமாக்கியுள்ளார் பிரபு என்ற கலைஞர்.சூரிய பகவான் - மேலிருந்து மூன்றாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
அக்னி பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம்.
எம தருமன் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
பித்ரு - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம்.
மழை கடவுளான வருண பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து கடைசி கட்டம்.
வாயு தேவன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம்.
குபேரன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
மற்றும்
ஈசானன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம்.

என்ற அஷ்ட திக்கு பாலகர்களை மூலிகை ஓவியத்தில் திக்கு விஜயம் செய்யும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - மூலிகை ஓவியங்கள்

அன்னை அரசியாக முடிசூடி, எட்டு திக்கிலும் திக் விஜயம் செய்து, வெற்றி கண்டு, ஐயனை சுந்தரேஸ்வரராக கல்யாணம் கோலம் கொண்டு அருளும் அருட்காட்சி மூலிகைஓவியமாக.


வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க - அரசியாக அன்னையை முடிசூடி ஆனந்திக்கும் வானோர்கள்.எட்டு திக்கில் வென்ற அன்னை கைலாயத்தை நோக்கி முன்னேறும் காட்சி


பவளக்கனிவாய் அன்னல், அண்ணனாக தாரை வார்த்து தர. அம்மையும் அப்பனும் கல்யாண கோலம் தந்தருளும் காட்சி.

அடுத்த பதிவில் மூலிகை ஓவியத்தில் தேவேந்திரன் வணங்கி சாபவிமோசனம் பெற்ற காட்சி.

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - மூலிகை ஓவியங்கள்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பொற்றாமரை குளக்கரையில் அம்மையப்பனின் திருவிளையாடல்கள், மற்றும் பல நிகழ்வுகள் காலத்தால் அழிக்க முடியாத வகையில் மூலிகை ஓவியங்களாக வரையப்பட்டு வருகின்றன. (படங்களை சொடுக்கினால் பெரிதாகும்)


தற்ச்சமயம் சில படங்கள் திறக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது! அதில் சிலவற்றை படங்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

முதலில் கணேசனின் திருவுருவம்.

அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலை முழுமையாக கொண்ட ஒரு மூலிகை ஓவியம். மீனாட்சி அம்மன் & சுந்தரேஸ்வரர் சந்நிதிகள், பொற்றாமரை குளம், பெரிய மற்றும் சிறிய கோபுரங்கள் என்று முழுமையாக கோவிலையே தரிசித்து விடலாம்.

இப்படம் கடந்த 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதை அங்கிருக்கும் கல்வெட்டுக்களும் கூறுகின்றன.

மேலும் மூலிகை ஓவியப்ப படங்கள் அடுத்து வரும் பதிவுகளில்

Monday, September 15, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - இந்திர விமானம்

எத்தனையோ படங்களை மனற்கேணி என்ற இவ்வலைப்பூவில் வலையேற்றியுள்ளேன், ஆனால் இது போன்றதொரு காட்சி அதிலும் சரி, வேறெங்கும் சரி காணக்கிடைக்காதது! அருமையாக படமாக்கி இருந்தார் சுரேஷ் என்ற ஒரு கலைஞர். பொற்றாமரை குளத்தின் நடைபாதையில், சமயக்குரவர்கள் நால்வர் படம் வரையப்பட்ட இடத்திலிருந்து கண்டால் இந்த அரிய காட்சி காணலாம். நீங்களும் காண இதோ.தேவேந்திரன் நிர்மானித்த இந்திர விமானம்.

திருச்சிற்றம்பலம்

நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே.
1.94.1
ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே.
1.94.2
ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே.
1.94.3
அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.
1.94.4
ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே.
1.94.5
அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.
1.94.6
அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.
1.94.7
அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.
1.94.8
அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே.
1.94.9
ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே.
1.94.10
அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே.
1.94.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ள, மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி, தேவியார் - மீனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

நன்றி : சைவம்.ஆர்க்

Saturday, September 13, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - மாதிரிகள்

இன்று ஒரு சில புதிய படங்கள் காணகிடைத்தது. உங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு தொடராக ஆரம்பிக்கிறேன்.

ஓளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலின். இதுபோன்ற படங்கள் நேரில் காணும் அனுபவத்திஅ தரும்.
மேலும் ஒரு படம் கீழே இருக்கும் ஒரு மாதிரியை சொடுக்கி பார்த்தால் அதன் தனித்துவம் தெரியும், ஆடி வீதிகளில் அசைந்தாடும் தங்கத்தேரின் மாதிரியையும் செய்திருப்பர் (வலது ஓரத்தில்).
மேலும் சில கோவில் படங்கள் அடுத்த பதிவில்.

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை வலம் வர அப்படியே பார்த்து கொண்டிருங்கள். என் கோப்பில் இருக்கும் ஏறத்தாழ 300 படங்கள் உங்கள் கண்முன்னே வந்தபடி இருக்கும். ஒரு படம் இரு வினாடிகள் தெரியும், எல்லா படமும் காண ஏறத்தாழ 10 நிமிடமாகும்.

Friday, September 12, 2008

ஆவணிமூல திருவிழா

ஆவணி மூல திருவிழா - கடைசி நாள்

விறகு வாங்கலியோ வெறகு.


மாணிக்கம் விற்றவர், வளையல் விற்றவர், இதோ விறகும் விற்க வந்து விட்டார்.

களைப்பு தெரியாமல் இருக்க யாழை மீட்டியும், நம் களைப்பை போக்கவும் வந்து அருள்பாலித்த காட்சி.

ஆவணி மாதம் 26ஆம் நாள்(11/09/2008) நடந்த விறகு விற்ற லீலை இத்துடன் ஆவணி மூல திருவிழா நிறைவடைகிறது.


பாத்தா பசுமரம் படுக்கவெச்சா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா

அன்புள்ள அனைவருக்கும்,
இத்துடன் அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா நிறைவடைகிறது. அடுத்த திருவிழாவான நவராத்திரி வரும் புரட்டாசி மாதம் 14ஆம் நாள் (30/09/2008) தொடங்கி புரட்டாசி மாதம் 23ஆம் நாள்(9/10/2008) வரை நடக்கவுள்ளது அதையும் பதிக்க ஐயன்/அம்மன் திருவுள்ளம் கொள்ள வேண்டி நிற்க்கும் அடியவன்.

இப்பதிவு தொடரை வந்து பார்த்து படித்த அனைவருக்கும் நன்றி.
சிவமுருகன்.

Thursday, September 11, 2008

ஆவணி மூல திருவிழா - ஒன்பதாம் நாள்

ஆவணி மாதம் 25ஆம் நாள்(10/09/2008) நடந்த பிட்டுக்கு மண்சுமந்த லீலை.கரையை கடக்க செய்பவன் கரையை அடைக்க வந்த காட்சி. ஈசனே மதுரையின் வைகைகரையை அடைத்து சமன் செய்த காட்சி. தங்க கூடை சுமந்து, தங்க மண்வெட்டி தரித்து, அருட்காட்சியளிக்கும் சொக்கநாத பெருமான்.


(நவராத்திரிநாளில் ஒரு மண்சுமந்த அலங்காரம்)


இன்று ஆவணி மாதம் 26ஆம் நாள்(11/09/2008) விறகு விற்ற லீலை இன்றே ஆவணி மூல திருவிழா நிறைவடைகிறது.

Wednesday, September 10, 2008

ஆவணி மூல திருவிழா - எட்டாம் நாள்

ஆவணி மாதம் 24ஆம் நாள்(09/09/2008) நடந்த நரியை பரி(குதிரை)யாக்கிய லீலை.

குதிரை வாங்க திருவாதவூரிலிருந்து மதுரைநோக்கி வரும் மாணிக்கவாசகர்
நரிகளை பரியாக்கும் சொக்கநாதர் பெருமான்
இன்று ஆவணி மாதம் 24ஆம் நாள் காலை நடக்கும் பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடலை காணவும் விழாவை சிறப்பிக்கவும் வருகை தரும் திருப்பரங்குன்றத்து குமரன்.

Tuesday, September 09, 2008

ஆவணி மூல திருவிழா - ஏழாம் நாள்


ஆவணி மாதம் 23ஆம் நாள்(08/09/2008) நடந்த வளையல் விற்ற லீலை.

ஆவணி மூல திருவிழா - ஆறாம் நாள்

ஆவணி மாதம் 22ஆம் நாள்(07/09/2008) நடந்த பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை

ஆவணி மூல திருவிழா - ஐந்தாம் நாள்

ஆவணி மாதம் 21 ஆம் நாள்(08/09/2008) நடந்த உலவாக்கோட்டையருளிய லீலை

ஆவணி மூல திருவிழா - நான்காம் நாள்

ஆவணி மாதம் 20ஆம் நாள்(05/09/2008) நடந்த தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை.

ஆவணி மூல திருவிழா - மூன்றாம் நாள்

ஆவணி மாதம் 19 ஆம் நாள்(04/09/2008) நடந்த மாணிக்கம் விற்ற லீலை

ஆவணி மூல திருவிழா - இரண்டாம் நாள்


ஆவணி மாதம் 18ஆம் நாள்(03/09/2008) நடந்த நாரைக்கு முக்தியளித்த லீலை

ஆவணி மூல திருவிழா - முதல் நாள்

ஆவணி மூல திருவிழா பற்றி திருவிளையாடற் புராணம் மிக அருமையாக சொல்கிறது.

இறைவனே மதுரையில் செய்த பல ஆடல்களை திருவிளையாடல்களாக காட்டும் ஒரு படங்கள் நீங்களும் காண, இங்கே இடுகிறேன். வழக்கமாக படங்கள் இணைய தொகுப்பே.

பிட்டுக்கு மண் சுமந்தது கோவில் சிற்பம்.


ஆவணி மாதம் 17ஆம் நாள்(02/09/2008) நடந்த கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை