மதுரை, தெற்குமாசிவீதியில் உள்ள மிகவும் புகழ் பெற்ற தலம். அம்மன் கோவிலுக்கு செல்ல முடியாதவர் பலர் இக்கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.
இங்குள்ள தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். மருத்துவமனை சிகிச்சையும் விலகுகிறது.
இறைவனை வணங்குவோர்க்கு மன நிம்மதி கிடைக்கும்.
கருணையே உருவான இத்தலத்து அம்பாளை வழிபட்டால் திருமணவரம், குழந்தை வரம் ஆகியன கிடைக்கின்றன.
சுவாமிக்கு வஸ்திரம் வழங்கி பெரும் அளவில் புண்ணியம் பெருகின்றனர்.
கல்வி வரம், எடுத்தகாரியம் நடைபெற இத்தலத்தில் இருக்கும் குரு பகவானை வழிபடலாம்.
தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில் இது. இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும்.திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.
இங்குள்ள மூலவர் மதுரையில் உள்ள சிவதலங்களில் அளவில் பெரியவர்.
வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் ஆகியவற்றில் இருந்தெல்லாம் இக்கோயிலுக்கு உடல்நலம் வேண்டி வருகிறார்கள்.
திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.
எமதர்மராஜன் வழிபட்டு மரணபயம் நீங்கிய தலம்.
சுவாமிக்கு இத்தலத்தில் பால் அபிசேகம் செய்தல் சிறப்பு.
தேன், எண்ணெய், இளநீர்,சந்தனம்,பன்னீர்,நல்லெண்ணெய் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்து நேர்த்திகடனை செய்கின்றனர்.
அம்பாளுக்கு மஞ்சள், சிவப்பு நிற புடவை சாத்து இத்தலத்தில் சிறப்புவாய்ந்த வழிபாடாகும்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.
இங்கிருக்கும், நவகிரஹங்களை வணங்கிட கிரஹ தோஷங்கள் நீங்கும்.
வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தென்திருவாலவாய் என்றால்?
பண்டைய காலத்தில் “திருவிளையாடல் புராணத்தில்” மதுரைக்கு எல்லை காட்டிய படலம் என்று உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்றே தெரியாமல் போனது. அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க வங்கிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டுகிறான். அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போடுகிறார். போட்டு விட்டு அந்த பாம்பு மதுரையையே ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது.அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய படமும், வாலும் ஒன்று சேர்ந்ததாக சொல்கிறது திருவிளையாடல் புராணம். மேலும் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது. அதனால் தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது. ஆலவாய் என்ற பாம்பு , தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென்திருஆலவாய் என்று பெயர் வந்தது.
அஸ்வத்தபிரதட்சண்யம்
இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணயம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர். இத்தலத்தில் 60ம் (ஷஷ்டியப்த பூர்த்தி) கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது.அவர்களே சதாபிசேகமும் (80 ) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.
மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் 1. பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.
2. இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் ஸத்பதவி கிடைக்கும்.
3. முக்தீசுவரரை வணங்கினால் முக்தி கிடைக்கும்.
4. தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
5. தவிர இந்த நான்கு கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும்.
எமன் வழிபட்ட தலம்
மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை (சொற்றுனை வேதியன்) விடச் சிறந்த நண்பனும் இல்லை.இத்தகைய வைத்தியநாதப்பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்தலமே தென்திருவாலவாய் ஆகும். தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. அவர் சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார்.அப்போது தென்திருவாலவாய கோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார்.எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் இது.
கந்த சஷ்டி ஐப்பசி 6 நாட்கள் திருவிழா சுப்ரமணியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள்.
அன்னாபிசேகம் ஐப்பசி பௌர்ணமி நாளில் சிறப்பாக நடைபெறும்.
ஆடிப்பூரம், கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிசேகம் சிறப்பாக நடைபெறும்.
பௌர்ணமி தோறும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும்.
ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய விஷேச தினங்களில் 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
தவிர தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு உள்ளிட்ட அனைத்து விஷேச நாட்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெறும்.
மாதத்தின் பிரதோஷ நாட்களில் வெகுசிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்படைகின்றனர்.
தல வரலாறு :
மதுரை மாநகரில் சைவ சமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம்.அப்போது மதுரையை ஆண்ட சைவ சமயத்தை சேர்ந்த பாண்டிய மன்னன், தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான்.அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள்.மிகவும் தீவிர சைவபற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள்.அப்போது வினைபயனாக பாண்டியனுக்கு வெப்பு நோய் வருகிறது. உடம்பு பூராவும் உஷ்ணத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய், அக்கொடிய நோயினால் அவதியுற்று கூன்விழுகிறது அதுவே அம்மன்னனின் பெயராகவும் “கூன்பாண்டியன்” என்றாகி விடுகிறது. அந்த நோயை தாங்க முடியாமல் தவிக்கிறான் மன்னன். அப்போது சமணர்கள் எவ்வளவோ மந்திர-தந்திர வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி, தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிஷேக அர்ச்சனைகளும் செய்து அந்த திருநீற்றை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய, சமணர்கள் ஒத்துகொள்ள மறுக்கின்றனர், பின் இருவருக்கிடையில் சமரசம் செய்து வலப்பக்கம் சமணர்களின் மந்திர மருத்துவமும், இடபாகத்தில் ஞானசம்பந்தரின் திருநீறு மருத்துவம் செய்ய இடப்பக்கம் குணமடைகின்றது, ஆனால் வலப்பக்கம் எந்த வித மாற்றமும் இல்லாமல் நோய் அப்படியே இருக்கிறது. இதைகண்ட மன்னன் சைவ சமயத்தை போற்றியும், சமணத்தை துறந்து இருபுறமும் திருநீறு பூச, அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது. கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளால் நெடுமாறனாக நிமிர்ந்து, இறைவனின் அருளை முழுமையாக உணர்ந்து தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சிவதொண்டு புரியலானார்.
அடுத்த பதிவில் ஏடேறிய படலம் நிகழ்ந்த ஏடகநாதர் கோவில்.
2 comments:
சிவா
நீங்க மதுரையை கலக்குறீங்க எனக்கு திருச்சியைப்பற்றி படங்கள் போட ஆசை ஆனால் அதற்கான கேமரா நேரம் இல்லையே என்ன செய்ய
தெந்திருவாலவாய்த் திருக்கோவிலைப் பற்றிய சிறந்த தகவல்களை தினமலரில் இருந்து எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி சிவமுருகன்.
Post a Comment