Monday, March 06, 2006

15: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 9

* கிளிகூண்டு மண்டபம்,
ஒருமுறை சுகமுனிவர் கிளிருபங்கொண்டு அம்மனை காணவந்தவர் அம்மனின் மரகதவண்ணம் கண்டு, நானும் பச்சை, தாங்களும் பச்சை வண்ணமே என்று சொல்லி அப்படியே அம்மனின் கைகளில் அமர்ந்து விட்டதாக சொல்வதுண்டு. அதை நினைவு கூறும் வகையில் பல கிளிகளை வளர்த்து வருகின்றனர். இடையில் தடைபட்ட இப்பணி, இப்போது மீண்டும் உயிர்பித்துள்ளது.


* ஊஞ்சல் மண்டபம்,

ஒவ்வொரு வெள்ளிகிழமை மாலையில் அம்மனும், அப்பனும், இங்கு எழுந்தருளி ஊஞ்சல் சேவை வழங்குவர். அடியார் ஒருவர் பண் இசைத்து கொண்டே ஊஞ்சலை கயிறு கொண்டு தாலாட்டுவது போல் ஆட்டுவிப்பதை காண கண்கோடி வேண்டும்.

ஊஞ்சல் மண்டபத்தை அடுத்து அமைந்துள்ள கோவிலின் மாதிரி.

* சித்தி விநாயகர் சன்னிதி.

கோவிலின் ஸ்தல விநாயகரான சித்தி விநாயகர், சகல சித்திகளை அருளவும், பெற்ற சித்திகளை காத்து, வளர்துவர பல வித்தைகளையும் அருளிவருகிறார். காலையில் இவருக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது பிறகே மற்ற சன்னிதிகள் (அம்மன் சன்னிதி உட்பட) திறக்கப்படுகிறது.

* பஞ்சபாண்டவர் மண்டபம்.

13 ஆண்டுகள் வனவாசத்தின் போது காடுகளில் சுற்றி திரிந்த பஞ்சபாண்டவர்கள் கடம்ப மரங்கள் நிறைந்த க்ஷேத்திரத்தில், அர்ச்சுனனின் தர்மபிதாவான இந்திர விமானதினடியில் இருந்த சொக்கநாதரை கண்டு வியந்து இவ்விடத்தில் அமர்ந்து கடும் தவமியற்றி அர்ச்சுனன் ஈசனிடமிருந்து காண்டீபம் என்ற வில்லை பெற்றதாகவும், மற்றவர்கள் தீர்காயுள் பெற்றதாகவும் சொல்வதுண்டு. அதை நினைவு கூறும் வகையில் சித்தி விநாயகர் சன்னிதியை அடுத்து பஞ்சபாண்டவர் சிலைகளை நிறுவியுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் தர்மன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் நால்வரும் தமக்கே உரிய அஸ்திரங்களுடனும், பீமன் கதையை உயர்த்தியபடி பலி பீடத்தின் இடது புறத்தில் நிற்க, திரௌபதி இம்மண்டபத்தின் வடகோடியில் நானிய முகத்துடன் நிற்கிறாள்.

மேலும் ஒவ்வொரு சகோதரர்களின் இடையிலும் விதவிதமான யாளி சிலைகளும், பீமனின் மறுபுறத்தில். வியக்ரபாதரும், வாலி, சுக்ரீவன், சிலைகளுடன், ஆங்கிலேய ஆட்சியின் போது மதுரை மக்களால் 'பீட்டர் பாண்டியன்' என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேயர் ஒருவரின் சிலையும் உள்ளது. ஒருமுறை இவர் அம்மனால் இடியில் இருந்து காக்கப்பட்டவர், பிறகு அம்மையின் பேரன்புக்கு பாத்திரமாகி, மதுரை எல்லையில் உள்ள எல்லா கோவில்களை பேணிகாக்க நிதிகளை வழங்க உத்தரவிட்டவர். அதனாலேயே இவரை மக்கள் பீட்டர் பாண்டியன் என்று அழைத்தனர் .


அடுத்து பலிபீடத்தில் நம் அகந்தைகளை பலியாக்கி, சித்த சுத்தி பெற்று அம்மனை நோக்கி செல்வோம்.

முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

2 comments:

குமரன் (Kumaran) said...

பல புதிய தகவல்களை அள்ளித் தருகிறீர்கள் சிவமுருகன். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மை அப்பன் ஊஞ்சல் சேவை கண்டருளுவர் என்பதும், தினமும் காலையில் சித்தி விநாயகருக்கே முதல் பூஜை செய்யப் படுகிறது என்பதும், பீட்டர் பாண்டியனைப் பற்றிய செய்தியும் எனக்குப் புதிது. அடுத்த முறை செல்லும் போது திரௌபதியின் நாணிய முகத்துடன் இருக்கும் சிலையையும், பீட்டர் பாண்டியன் சிலையையும் தேடிப் பார்க்க வேண்டும்.

சிவமுருகன் said...

ஆமாம் குமரன், பலருக்கும் பீட்டர் பாண்டியன் பற்றியும், பாண்டவர் சிலைகளை பற்றியும் தெரிய வாய்பில்லை. ஸ்தல புராண புத்தகத்தில் இவை இடம்பெற்றுள்ளது.

பல முறை ஸ்தல விநாயகருக்கு முதல் பூஜை செய்வதையும், ஊஞ்சல் சேவையும் பார்த்திருக்கிறேன்.

பீட்டர் பாண்டியனின் சிலையருகில் தற்போது மடபள்ளி சாம்பல் வைக்கப்படுகிறது.